Loading...
'கஜினி' வில்லன் நடிகர் பிரதீப் ராவத் 74 வயதில் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
'கஜினி' வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

'கஜினி' வில்லன் நடிகர் பிரதீப் ராவத் 74 வயதில் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
09:19 am

செய்தி முன்னோட்டம்

இந்திய திரையுலகில் 'கஜினி', 'லகான்' போன்ற காவியத் திரைப்படங்கள் மற்றும் பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடர் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற மூத்த நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. 1952-ஆம் ஆண்டு ஜபல்பூரில் பிறந்த பிரதீப் ராவத், 1980-களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். 1988-ல் வெளியான பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து ஆமீர் கானுடன் இணைந்து 'சர்ஃபரோஷ்', 'லகான்' ஆகிய படங்களில் நடித்த அவர், 'கஜினி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் கொடூரமான வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தார்.

தொழில் பயணம்

தென்னிந்திய திரையுலகில் முத்திரை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அஜித்தின் 'வீரம்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'சை' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 'பிக்ஷு யாதவ்' என்ற வில்லன் கதாபாத்திரத்திற்காக விருது வென்றார்.

தொடர்ந்து 'சத்ரபதி', 'ஸ்டாலின்', 'நாயக்' போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் வில்லனாக நடித்துத் தென்னிந்திய சினிமாவிலும் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தார்.

சுமார் 40 ஆண்டுகால நீண்ட திரைப்பயணத்தில் 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக மீண்டும் தீவிரமடைந்த புற்றுநோய் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததை மேலாளர் மற்றும் சக நடிகர் யாஷ்பால் சர்மா உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT