Loading...
'என் போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்': ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தேவையான ஆதாரங்கள் தொலைபேசியில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

'என் போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்': ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
06:29 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசுக்கு எதிரான தனது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தேவையான ஆதாரங்கள் அந்த தொலைபேசியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற Ask Me கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தன்னுடன் நேருக்கு நேர் பொது விவாதத்திற்கு வர வேண்டும் என்ற சவாலை மீண்டும் விடுத்துள்ளார்.

தேசவிரோதி

"யார் தேசவிரோதி என்பது விவாதத்தில் தெரிந்துவிடும்"

கடந்த 12 நாட்களில் ஏழாவது முறையாகப் பிரதமருக்கு விவாத சவால் விடுத்துள்ள ராகுல் காந்தி, தனது கைபேசியை காட்டியவாறு,"அரசுக்கு எதிரான எனது அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களும் எனது போனில் உள்ளன; அதனை பிரதமர் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்" என குற்றம் சாட்டியுள்ளார்.

"நேருக்கு நேர் விவாதம் நடத்தினால், யார் வெளிநாட்டுச் சக்திகளால் இயக்கப்படுகிறார்கள், யார் உண்மையான தேசவிரோதி, எப்போதிலிருந்து அவர் தேசவிரோதியாக இருக்கிறார் மற்றும் எனது போனில் உள்ள பல ரகசியத் தகவல்கள் நாட்டு மக்களுக்குத் தெரியவரும்" என அவர் கூறியுள்ளார்.

பதிலடி

பாஜக தலைவர்கள் கடும் பதிலடி

முன்னதாக வெளியிட்ட வீடியோ செய்தியில், விவாதத்திற்கான இடத்தையும், நடுவரையும் பிரதமர் மோடியே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியிருந்த ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அல்லது தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரைக் கூட நடுவராக நியமிக்க தனக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் நிதி அமைப்பு, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், அதானி விவகாரம், சீனா மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்குள் 'திமாகி நக்சல்கள்' ஊடுருவியுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்ததைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது.

ராகுல் காந்தியின் புகாருக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ADVERTISEMENT

பின்னணி

Pegasus சர்ச்சையின் பின்னணி

ராகுல் காந்தியின் தற்போதைய குற்றச்சாட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு எழுந்த 'பெகாசஸ்' உளவு மென்பொருள் சர்ச்சையை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன்களை மத்திய அரசு இஸ்ரேலிய உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்பதாக ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.

2022-இல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, ஆய்வு செய்த 29 போன்களில் 5 போன்களில் மால்வேர் இருந்ததை கண்டறிந்தபோதிலும், அது பெகாசஸ் மென்பொருள்தான் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT