இன்று வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களின் 'மேஜிக் நம்பர்' என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. மொத்தம் 824 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியைப் பிடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகள் பெற வேண்டிய குறைந்தபட்ச இடங்கள் (Magic Numbers) மற்றும் தற்போதைய கள நிலவரம் குறித்த முழு விவரங்கள் இதோ:
#1
தமிழ்நாடு (Magic Number: 118)
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. கருத்துக் கணிப்பு நிலவரம்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகிய கட்சிகள் கடும் சவாலை ஏற்படுத்தி வருகின்றன.
#2
மேற்கு வங்கம் (Magic Number: 148)
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஃபால்டா தொகுதியில் முறைகேடு புகார்கள் காரணமாக மே 21-க்கு மறுவாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று 293 தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க தேவையான இடங்கள்: 148 கருத்துக் கணிப்பு நிலவரம்: பாஜக மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக 150 முதல் 160 இடங்கள் வரை பெறலாம் என்றும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 130 முதல் 140 இடங்கள் வரை பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
#3
கேரளா (Magic Number: 71)
கேரளாவில் வழக்கமாக நிலவும் 'மாற்று ஆட்சி' என்ற நடைமுறை இம்முறையும் தொடருமா அல்லது முதல்வர் பினராயி விஜயன் 3-வது முறையாக புதிய வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்த இடங்கள்: 140 ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள்: 71 கருத்துக் கணிப்பு நிலவரம்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 78 முதல் 90 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
#4
அசாம் மற்றும் புதுச்சேரி
அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பாஜக தலைமையிலான NDAவிற்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் பலத்த பலப்பரீட்சை இங்கே உள்ளது. அதேபோல புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 16 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கே என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி vs INDIA கூட்டணி என்ற கடும் போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்பு நிலவரம்: அசாமில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி 3-வது முறையாகத் தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.