2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்
பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பல படங்கள் தோல்வி அடைந்தாலும், பல படங்கள் எதிர்பார்த்தது போலவே வசூலை வாரி குவித்து வெற்றி பெற்றது. இந்த ஆண்டு முக்கியமாக, தமிழ் சினிமா டாப் ஹீரோக்களுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்த முக்கிய திரைப்படங்கள் சிலவற்றை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா,சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் நடித்திருந்தது. விஜய் புகைப்பிடிப்பதிலிருந்து, படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்பது வரை, வழக்கமாக விஜய் படத்திற்கு எழும் அனைத்து சர்ச்சைகளும் இப்படத்தையும் சுற்றின. மேலும், பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் ₹600 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர்
விக்ரம் படம் மூலம் கமலஹாசன் கம்பேக் கொடுத்த நிலையில், அண்ணாத்த படம் சரியாக போகாததால், ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தள்ளப்பட்டார். அந்த பொறுப்பை கச்சிதமாக ஏற்ற இயக்குனர் நெல்சன், படத்தில் ஆக்சன், பாடல்கள், சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இப்படம் செய்த வசூல் சாதனையை, இதற்கு பின்னால் வெளியான படங்கள் முறியடிக்குமா என்ற விவாதங்கள் எழுந்தது, இப்படத்தின் வசூல் சாதனைக்கு எடுத்துக்காட்டு.
மார்க் ஆண்டனி
இந்த ஆண்டு ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்களில் வரிசையில், மார்க் ஆண்டனி ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் படமாக இதை உருவாக்கி இருந்தார். படம் முழுக்க பல லாஜிக் பிழைகள் இருந்தாலும், அதை எல்லாம் பொறுத்துக் கொண்ட ரசிகர்கள், படத்தை வெற்றி பெறச்செய்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படத்தில், அஜித்தை இயக்குவது, மார்க் ஆண்டனி வெற்றி பெற்றதற்கு சாட்சி.
பொன்னியின் செல்வன் 2
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் தொடங்கி பலரும் முயன்று சாதிக்க முடியாததை, இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் சாதித்து விட்டார். கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் என்னவோ படம் முதல் பாகம் அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எதிர்பார்த்த விமர்சன ரீதியான வரவேற்கும், வசூலும் படத்திற்கு கிடைக்காத போதும், படம் ₹350 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் விஜயின் குடும்பத்திற்குள் நடைபெறும் பிரச்சனைகளே படத்தின் கதை. படம் சீரியல் போல் இருக்கிறது என பலர் ட்ரோல் செய்தாலும், விஜய் படம் என்பதால் எதிர்பார்த்த வசூலை பெற்றது. உலகம் முழுவதும் படம் ₹300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது.
துணிவு
2014 ஆம் ஆண்டுக்கு பின், மீண்டும் 9 ஆண்டுகள் கழித்து, அஜித் மற்றும் விஜய் படங்கள் பொங்கலுக்கு மோதின. தனித்துவமான கதை அமைப்புகளில் படம் எடுக்கும் வினோத், வங்கி கொள்ளையும், வங்கிகள் அடிக்கும் கொள்ளையும் குறித்த படத்தை அஜித்தை வைத்து எடுத்திருந்தார். படத்தில் பல பழக்கமான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தாலும், அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதனால் படத்தின் வசூலும் எகிறியது. உலக அளவில் ₹200 கோடிக்கு மேல் துணிவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
வாத்தி
தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் வெளியான படம், பல மொழிகளில் பல படங்கள் அடித்து துவைத்த கல்வி வியாபாரத்தை பற்றி பேசியது. நடிகர் தனுஷின் புதுமையான முயற்சி, சமூகத்தில் நடக்கும் கட்டண கொள்ளைக்கு எதிரான இயக்குனரின் கோபத்திற்காக படம் பாராட்டப்பட்டாலும், தெலுங்கு படம் போன்ற ஆக்சன் காட்சிகளும், சுமாரான திரைகதையும் படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று தந்தன. இருப்பினும், படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பதான்
கடந்த ஐந்து வருடங்களாக திரைப்படங்களிலிருந்து விலகி இருந்த ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் ரிஎன்ட்ரி கொடுத்தார். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தேசத்திற்காக உயிரைவிட துணியும் மாவீரன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். படத்திற்கு, ஒரு பாடல் காட்சியில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவிநிற உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், அவற்றை தவிடுபொடியாக்கி படம் மாபெரும் வெற்றி பெற்று, உலக அளவில் ₹1,000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
ஜவான்
தமிழில் நான்கு வெற்றி படங்களை இயக்கிய அட்லி, பாலிவுட் சென்று ஷாருக்கான் இயக்கிய படம் ஜவான். பதான் படத்தில் கம் பேக் கொடுத்த ஷாருக்கான், இப்படத்தின் வெற்றியின் மூலம் தான் சூப்பர் ஸ்டார் என நிரூபித்து விட்டார். இப்படத்தில் வந்த ஆக்சன் காட்சிகள், ஷாருக்கான் ஒரு ரொமான்டிக் ஹீரோ என்பதை மறக்க செய்துவிட்டது. படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் அட்லி, ஷாருக்கான் மற்றும் விஜய் வைத்து, படம் இயக்க கதை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.