அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கடந்த சனிக்கிழமை கராச்சியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். அவர் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. முப்தி கைசர் ஃபரூக், லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவிய நபர்களுள் ஒருவர் ஆவார். ஃபரூக், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகளுள் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் போது முதுகில் குண்டு காயம் அடைந்த ஃபரூக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள்
சமீப காலமாக, இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் பல பயங்கரவாதிகள் உலகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் சில கொலைகள் பாகிஸ்தானிலும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கொல்லப்பட்ட நபர் தான் முப்தி கைசர் ஃபரூக். அவர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி மட்டுமல்ல, இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்ட இன்னொரு பயங்கரவாதியும் ஆவார். நீண்ட காலமாக ஹபீஸ் சயீதைப் போலவே, இந்தியா ஃபரூக்கையும் தேடி வந்தது. இருப்பினும், பாகிஸ்தானில் அவர் தங்கியிருந்ததால், இந்தியாவால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், "தெரியாத நபர்களால்" அவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெய்ஷ்மி-இன் ஜியா-உர்-ரஹ்மான் உள்ளிட்ட பிற பயங்கரவாதிகளும் இதே போல் கொல்லப்பட்டனர்.
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவதியால் ஏற்பட்ட பிரச்சனை
கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவதிகளும் இதே போல் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் யாரால் கொல்லப்படுகிறார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. தற்போது சூடுபிடித்திருக்கும் இந்தியா-கனடா பிரச்சனைகளும் ஒரு பயங்கரவாதியின் கொலை தொடர்புடையது தான் என்பது நினைவுகூரத்தக்கது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து, இந்திய அரசாங்கத்திற்கும் கனட அரசாங்கத்திற்கும் ராஜதந்திர மோதல்கள் நடந்து வருகிறது.
ஹபீஸ் சயீத்துக்கு அதிகரித்து வரும் சிரமங்கள்
இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆவார். பிரபலமான பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் தான் இந்த ஹபீஸ் சயீத். சமீப காலமாக, இவர் அதிகமான சவால்களை எதிர்கொண்டு வருகிறார். செப்டம்பர் 26 முதல், ஹபீஸ் சயீத்தின் மகன் கமாலுதீன் சயீத்தை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. செப்டம்பர் 26ஆம் தேதி, பெஷாவரில் இருந்து காரில் கமாலுதீன் சயீத், சில நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. ஆனால் கடத்தல்காரர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஹபீஸ் சயீத்தின் சகோதரருக்கு கடும் பாதுகாப்பு
லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்களின் மீதான தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் தாக்குதல்களால், ஐஎஸ்ஐ, கமாலுதீன் சயீதை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்ட செய்தி தவறானது என்றும் சில பாகிஸ்தான் ஊடகங்கள் கூறி வருகின்றன. இதற்கிடையில், ஹபீஸ் சயீத்தின் சகோதரர் தல்ஹாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தல்ஹா, லஷ்கர்-இ-தொய்பாவின் நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு வகித்து கொண்டே பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தல்ஹா சயீத்தை, பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், அவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வாதிட்டு வருகிறது. ஆனால், சீனா இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.