
இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறதாம் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். இவற்றோடு பதற்றமாக இருக்கும் மற்ற பிராந்தியங்களையும் கண்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது, கம்போடியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்," என்று ரூபியோ NBC நியூஸின் மீட் தி பிரஸ் நிகழ்ச்சியின் போது கூறினார்.
டிரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் தான் காரணமாம்!
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைக் குறைக்க உதவியதாக டிரம்ப் பலமுறை தம்பட்டம் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனது தலையீடு இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். இருப்பினும், இந்தியா இந்தக் கூற்றுக்களை உறுதியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாகவே நிர்வகிக்கப்படுகின்றன என்றும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் தனது இராணுவ முடிவுகள் அல்லது போர் நிறுத்த நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பதை பிரதமரும் நாடுமன்ற விவாத நேரத்தில் அழுத்தமாக கூறியிருந்தார்.
ரஷ்யா
ரஷ்யா- உக்ரைன் போரில் மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா
நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் மோதல்களில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருவதாகவும், ஆனால் போர் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என்றும் ரூபியோ கூறினார். "போர் நிறுத்தத்திற்கான ஒரே வழி, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொள்வதுதான். ரஷ்யர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை," என்று அவர் உக்ரைனில் நடந்த போரைக் குறிப்பிட்டு கூறினார். நீண்ட மோதல்களுக்குப் பிறகு, குறிப்பாகப் போர் நிறுத்தத்தைப் பராமரிப்பது பெரும்பாலும் சவாலானது என்று அவர் மேலும் கூறினார். "போர் நிறுத்தம் மிக விரைவாக முறிந்து போகக்கூடும், குறிப்பாக நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது போன்ற மூன்றரை ஆண்டுகாலப் போருக்கு பிந்தைய போர்நிறுத்த பேச்சுவார்த்தை," என்று அவர் கூறினார்.