நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்
கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. "மனிதாபிமான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சியின் மூலம், நான்கு நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிக்கிறோம்" என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசி இடம் பேசிய மூத்த பாலஸ்தீன அதிகாரி, ஹமாஸ், போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்பவர்களிடம், போர் நிறுத்தத்தை மேலும் இரண்டிலிருந்து நான்கு நாட்கள் அதிகரிக்கவும், அந்த நீட்டிப்பின் மூலம், 20 முதல் 40 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
பணயக் கைதிகளை ஹமாஸ் கண்டறிய வேண்டும்- கத்தார்
போர் நிறுத்தத்திற்கு மத்தியஸம் செய்து வரும் கத்தார் பிரதமர், காசாவில் மற்ற அமைப்புகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள டஜனுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை கண்டறிந்தால் மட்டுமே, போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட பெரும்பான்மையான பணயக் கைதிகள், ஹமாஸ் வசம் இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர், உள்ளிட்ட பிற அமைப்பினரிடம் உள்ளனர். கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேரை, ஹமாஸ் அமைப்பை தவிர மற்றவர்கள் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இவர்களில், எத்தனை நபர்களை ஹமாஸ் அமைப்பால் கண்டறிய முடியும் என்பது தெரியவில்லை எனவும் கூறினார்.
இதுவரை எத்தனை பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்?
நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும், அதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மூன்றாவது நாள் போர் நிறுத்தத்தில் தற்போது வரை, 39 இஸ்ரேலிய குடிமக்கள், 13 பேர் கொண்ட மூன்று குழுக்களாக ஹமாஸால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் கொண்ட மூன்று குழுக்களாக, 117 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமாஸ் பிடித்து வைத்திருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 நபர்கள், இஸ்ரேல்-ரஷ்யா குடியுரிமை பெற்ற ஒருவர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.