மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்: திமுக - அதிமுகவைக் கடுமையாகச் சாடி ஆக்ரோஷப் பேச்சு
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மதுராந்தகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், "நான் இங்கு இடைத்தேர்தலுக்காக முதலமைச்சராக வரவில்லை; உங்கள் வீட்டுப் பிள்ளையாக வாக்கு கேட்க வந்துள்ளேன்". "மக்கள் தந்த பேராதரவால்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைத் தீய சக்தி எனக் கூறிய திமுகவுடன் அதிமுக தலைமை கைகோர்த்ததை சகித்துக் கொள்ள முடியாமல்தான் மரகதம் குமரவேல் தவெக-வில் இணைந்துள்ளார். எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்களுக்கு தவெக எப்போதும் அடைக்கலம் தரும்" எனக் கூறினார்.
விமர்சனங்கள்
திமுக மற்றும் அதிமுக மீது பாய்ந்த விமர்சனங்கள்
"திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் மு.க. ஸ்டாலின் எனது 'ஸ்வீட் அங்கிள்' தான்; ஆனால் ஊழல் செய்தவர்களை விடமாட்டோம். தங்கள் சொத்துப் பட்டியலை வெளிப்படையாக வெளியிட திமுக தயாராக உள்ளதா?" என கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் இருக்கும் பாஜகவின் பெயர் தான் திமுக, தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவின் பெயர் தான் பாஜக என விமர்சித்த அவர், எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருந்தால் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்கட்டும் என்றார்.
வாக்களித்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்படி 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஜெம் வீரமணி
ஜெம் வீரமணி வழக்கு: திமுக - அதிமுக கூட்டு என ஆக்ரோஷம்
போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி விவகாரம் குறித்துப் பேசிய விஜய், "தமிழகத்தில் சிறுமிகளைப் பல ஆண்டுகளாக சீரழித்த ஒருவனை திமுக ஆட்சியில் புகார் அளித்தும் வழக்கையே மூடி மறைத்து விட்டனர். சாப்ட்வேர், ஹிஸ்டரி வரை அனைத்தையும் மூடி மறைக்க திமுகவுக்குள் அப்படி என்ன டீலிங்?"
"இத்தனை நாளாக மூடி மறைக்கப்பட்ட வழக்கைத் தவெக அரசு தோண்டி எடுத்து அவனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த விஷயத்தில் திமுகவும் பேசவில்லை, அதிமுகவும் பேசவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே அப்படி என்ன கூட்டு?" என ஆக்ரோஷமாகச் சாடினார்.