Loading...
இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! எந்த மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை?
இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! எந்த மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
05:12 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. அங்கிருந்து கேரளா வழியாக வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை எச்சரிக்கை

மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கை

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உட்பட 31 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மித/கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT