LOADING...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2025
08:21 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தாக்கமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வான காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை மறுநாள் தெற்கு ஒடிஷா மற்றும் வட ஆந்திரா இடையே கரையை கடக்கும் எனக்கூறப்படுகிறது.

வானிலை

சென்னையில் மிதமழை பெய்யக்கூடும்

தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ. வேகத்தில், இடையிடையே 60 கிமீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மிதமான மழை வரும் ஆகஸ்ட் 23 வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.