Loading...
ஜெம் வீரமணி வழக்கு: திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு
திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு

ஜெம் வீரமணி வழக்கு: திமுக தொடுத்த மானநஷ்ட வழக்குக்கு எதிராக அமைச்சர்கள் மேல்முறையீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக அரசு அவரை பாதுகாத்ததாகக் கூறி விமர்சித்த அமைச்சர்கள் CTR நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ₹1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பின்னணி

வழக்கின் பின்னணியும் அவதூறு குற்றச்சாட்டும்

சிறுமிகளை படிக்க வைப்பதாக கூறி அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி உட்பட சிலர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் முந்தைய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் வீரமணி காப்பாற்றப்பட்டதாக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக ஐடி பிரிவினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அனுமதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முகாந்திரத்தை ஏற்று, அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக ₹1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், திமுக அளித்த புகாரின் பேரில் உரிய நேரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தங்குதடையின்றி நடைபெற்று வருவதாக திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

மேல்முறையீடு

அமைச்சர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு

நீதிமன்றத்தின் இந்த அனுமதியை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அரசு அமைச்சர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமானால், சிபிசி பிரிவு 80-ன் படி முன் கூட்டியே உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்படாமல் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த வழக்கை எண்களிட்டு விசாரிக்கக் கூடாது என பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியுள்ளனர்.

இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வரும் அக்டோபர் 13 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

அதுவரை மானநஷ்ட ஈடு கோரிய வழக்கை எண்ணிடும்படி வற்புறுத்த மாட்டோம் என திமுக தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT