திருப்பரங்குன்றம் மலை உச்சி கல்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு: மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதா அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வதா என்பது குறித்துத் தவெக தலைமையிலான மாநில அரசு ஆலோசித்து வருவதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பாதுகாப்பு
மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே உணர்வுப்பூர்வமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறை முழுமையான தடை விதித்துள்ளது.
மலைக்குச் செல்லும் கிரிவலப் பாதை மற்றும் பழனி ஆண்டவர் கோயில் பகுதி உள்ளிட்ட முக்கிய வழிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
3 உதவி ஆணையர்கள் தலைமையில் 10 ஆய்வாளர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரபரப்பு
வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்!
வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் மலை அடிவாரத்திற்கு வந்தனர்.
ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மலைப்பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனக் கூறி அனைவரையும் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.
இதனால் வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தீபத் திருவிழாவிற்கு இன்னும் இரு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.