பாஜகவில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழு உறுப்பினராக நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஒப்புதலுடன் மாற்றியமைக்கப்பட்ட கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில், யுஸ்வேந்திர சாஹல் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓபிசி அணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் பால் மௌரியா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
பாஜக தலைவர்கள்
பிரதமர் மோடிக்கு சாஹல் நன்றி
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பாஜக அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சாஹலின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜகவில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாஹல், "பாஜக குடும்பத்தில் தனக்கு இடமளித்தமைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய பொறுப்பில் அவர் டெல்லியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
அரசியலில் புதிய இன்னிங்ஸ் தொடக்கம்
கடந்த அக்டோபர் மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 36 வயதான யுஸ்வேந்திர சாஹல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சாஹல், ஐபிஎல் தொடரில் 233 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் களத்தில் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணிகளைத் திணறடித்த சாஹல், தற்போது அரசியலில் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.