Loading...
மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழப்பு; 180 பேர் மருத்துவமனையில் அனுமதி
மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழப்பு; 180 பேர் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
10:39 am

செய்தி முன்னோட்டம்

மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் கடந்த மூன்று நாட்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மெத்தனால் நச்சுத் தாக்குதல் அறிகுறிகளுடன் 180-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 18 முதல் 20 வரையிலான நாட்களில் சக்பிகரோங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தத் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிலர் தங்களது வீடுகளிலேயே உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின்போதும் உயிரிழந்தனர். முதற்கட்டமாக எட்டு பேரின் அடையாளங்களைச் சந்தேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல்துறை விளக்கம்

காக்சிங் மாவட்டத்தின் சுக்னு பகுதியிலிருந்து மதுபானம் கொண்டு வரப்பட்டதாகக் காவல்துறை விளக்கம்

சந்தேல் மாவட்டத்தில் உள்ளூரில் மதுபானம் தயாரிக்கப்படவில்லை என மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் அண்டை மாவட்டமான காக்சிங்கில் உள்ள சுக்னு பகுதியிலிருந்து வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பதிவான உயிரிழப்புகளில் ஐந்து மரணங்கள் சுக்னு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனப் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவுரை

வாந்தி, மங்கலான பார்வை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை

மரணங்களுக்கான துல்லியமான காரணம் மருத்துவ ரீதியாக இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் சந்தேல் மாவட்ட ஆட்சியர் பொது சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரை உள்ளூர் மதுபானங்களை அருந்துவதை மக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திய பிறகு வாந்தி, வயிற்று வலி, தலைவலி, மயக்கம், மங்கலான பார்வை அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சந்தேகத்திற்கிடமான மதுபானத்தை அருந்தியவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விசாரணைக்கு உத்தரவு

மருத்துவமனைகளில் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங் விசாரணைக்கு உத்தரவு

மணிப்பூர் முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங் இம்பாலில் உள்ள ஷிஜா மற்றும் பபினா மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று நோயாளிகளின் உடல்நலனை விசாரித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் பொது மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவையும் அத்தியாவசிய மருந்துகளையும் சந்தேல் மாவட்டத்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

ADVERTISEMENT