Loading...
'ஓம்' திரைப்படம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 50% திரையரங்குகளில் வெளியாகவில்லை: என்ன காரணம்?
வசூல் பங்குப் பிரிப்பு சிக்கலே இந்தத் திடீர் முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது

'ஓம்' திரைப்படம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 50% திரையரங்குகளில் வெளியாகவில்லை: என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2026
11:04 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 சதவீத திரையரங்குகளில் படம் வெளியாகாததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வசூல் பங்குப் பிரிப்பு சிக்கலே இந்தத் திடீர் முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

பின்னணி

ரோகிணி, வெற்றி தியேட்டர்களில் 'ஓம்' வெளியாகாததன் பின்னணி என்ன?

சென்னையின் மிகப் பிரபலமான ரோகிணி, வெற்றி உள்ளிட்ட முன்னணி திரையரங்குகளில் இன்று 'ஓம்' திரைப்படம் வெளியாகவில்லை.

'ஓம்' திரைப்படத்தை விநியோகம் செய்யும் AGS நிறுவனம், கடைசி வரை 70 - 30 என்ற சதவீத அடிப்படையிலேயே வசூல் பங்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த சதவீதப் பங்கு தங்களுக்கு ஏற்புடையதல்ல எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவுக்குள் இந்தப் பிரச்சினையில் சுமூகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடன்பாடு ஏற்படாததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களில் 50% திரையரங்குகளில் படத்தை வெளியிட உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.

முக்கிய விவரங்கள்

'ஓம்' திரைப்படம் குறித்த முக்கிய விவரங்கள்

இப்படத்தில் தனுஷ், மம்மூட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரும் நடித்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை, தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. OM படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது. சந்தன மரக்கட்டை கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ளது இந்த ஆக்‌ஷன் திரைப்படம்.

முதல் நாள் முதல் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், பிரபல திரையரங்குகளில் படம் வெளியாகாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பேச்சுவார்த்தை மூலம் இன்று மாலைக்குள் சுமூகத் தீர்வு எட்டப்பட்டு மற்ற திரையரங்குகளிலும் காட்சிகள் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT