8 ஆண்டுகளுக்கு பிறகு 2018 சாண்ட்பேப்பர் சர்ச்சையில் புது பூகம்பத்தைக் கிளப்பிய கேமரூன் பான்கிராஃப்ட்
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் உலகையே உலுக்கிய 2018-ஆம் ஆண்டு 'சாண்ட்பேப்பர் கேட்' பந்து சேதப்படுத்தும் விவகாரம் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராஃப்ட் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்' இதழில் 4,000 வார்த்தைகள் கொண்ட விரிவான கட்டுரையை எழுதியுள்ள பான்கிராஃப்ட், 2018 கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 2018-ஆம் ஆண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்திய விசாரணையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டனர்.
தடை
"திட்டத்தில் எனக்குத் தொடர்பில்லை என ஒதுங்கிக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித்"
பேட் கம்மின்ஸ்ஆனால், இந்தத் திட்டம் குறித்து ஓய்வறையில் பல வீரர்களுக்கு தெரிந்திருந்தது என பான்கிராஃப்ட் தற்போது கூறியுள்ளார்.
"அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த உரையாடலுக்குள் வந்தார். ஆனால், இந்தத் திட்டத்தில் தனக்கு எந்த பங்கும் இருக்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, அங்கிருந்து விலகிக் கொண்டார்"என பான்கிராஃப்ட் நினைவுகூர்ந்துள்ளார்.
"உப்புத்தாள் பயன்படுத்துவது கிரிக்கெட் விதிகளை மீறுவது மட்டுமல்ல, அது ஏமாற்று வேலை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், எனது 7-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரராக, அணிக்கு ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் எனது சிந்தனை மழுங்கிவிட்டது" என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சில சக வீரர்கள் தன்னை எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பேட் கம்மின்ஸ்
பந்து போதுமான அளவு 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆகிறதா என்பது குறித்து வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரிடம் தான் தொடர்ந்து பேசியதாகவும், தனது செயல்பாடு எதிர்பார்த்த பலனைத் தருகிறதா என்பது குறித்து அவர்கள் கருத்து தெரிவித்ததாகவும் பான்கிராஃப்ட் எழுதியுள்ளார்.
முன்னதாக கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் பந்தைச் சேதப்படுத்த மைதானத்திற்குள் பொருள் கொண்டு வரப்பட்டது தங்களுக்குத் தெரியாது என மறுத்திருந்தனர்.
சமீபத்தில் உஸ்மான் கவாஜா "அணி முழுவதற்கும் இது தெரியும்" எனக் கூறியதை கூட "முழுமையான அபத்தம்" என கம்மின்ஸ் நிராகரித்திருந்தார்.
தற்போது பான்கிராஃப்ட்டின் வாக்குமூலம் கம்மின்ஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா
டேவிட் வார்னர் ஆதரவு & கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு
பான்கிராஃப்ட்டின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு டேவிட் வார்னர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
"நீண்ட நாட்களாகத் தன் மனதில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை பான்கிராஃப்ட் இறக்கி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர் உண்மையைப் பேசியுள்ளார்; அவரது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்" என வார்னர் 7NEWS ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
இதற்கிடையில், 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அசல் விசாரணையை மீண்டும் தொடங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்தத் தொடரில் பங்கேற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பிரத்யேகக் கலந்துரையாடல் தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.