தமிழக அரசின் 'அண்ணன் சீர்' திட்டம்: 1 பவுன் தங்கம், பட்டுப் புடவை பெற விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் தரமான பட்டுப் புடவை பெறுவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2026-27 நிதியாண்டிற்கான 60,000 தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகளை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரியுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் குறித்து விரிவாகக் காண்போம்.
தகுதிகள்
அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்
மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு (₹2,50,000) மிகாமல் இருக்க வேண்டும்.
மணப்பெண்ணின் பெயர் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் ஏற்கனவே பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.
காலக்கெடு
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான காலகட்டத்தில் திருமணம் நடைபெறுபவர்கள், 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்முறை
விண்ணப்பிக்கும் முறை & செயல்முறைகள்
அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றின் தகுதி சரிபார்க்கப்பட்டு, தகுதியுடையவர்கள் திருமணப் பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
விண்ணப்பத்தின் நிலை குறித்து SMS, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும்.
தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும்; மேலும், அதன் மீது மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.