Loading...
இனி செருப்பே அணிய மாட்டேன் என்ற விஜய் ஆண்டனி: மகள் மறைவு குறித்து மனம் திறந்து பேசிய பாத்திமா விஜய் ஆண்டனி
'அப்பா குட்டி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன

இனி செருப்பே அணிய மாட்டேன் என்ற விஜய் ஆண்டனி: மகள் மறைவு குறித்து மனம் திறந்து பேசிய பாத்திமா விஜய் ஆண்டனி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இதனிடையே, திரைப்பட விழாக்களிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் விஜய் ஆண்டனி காலில் எந்தவிதமான செருப்போ ஷூவோ அணியாமல் வெறும் காலோடு கலந்துகொள்வது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணத்தை அவரது மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி முதல்முறையாக கண் கலங்கியபடி வெளிப்படுத்தியுள்ளார். 'அப்பா குட்டி' பட விழாவில் கலந்துகொண்டு பேசிய பாத்திமா விஜய் ஆண்டனி, தனது மகள் மீராவின் அகால மரணத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.

நெகிழ்ச்சி

"மகள் மீராவுக்காக செருப்பு அணிவதில்லை"

"எங்கள் மகள் மீராவிடம் 50, 60 ஷூக்கள் இருக்கும். அவள் கல்லூரிக்கு போகப் போகிறாள் என்று ஆசையாக அத்தனை ஷூக்களை வாங்கி வைத்தோம். ஆனால், அவள் இப்போது நம்முடன் இல்லை; அந்த ஷூக்கள் எல்லாமே அப்படியே கிடக்கின்றன. அதைப் பார்த்துவிட்டுத்தான், 'இனி நான் என் வாழ்க்கையில் செருப்பு அணிய மாட்டேன்' என விஜய் ஆண்டனி முடிவு செய்தார்."

"வெளியில் எங்கு சென்றாலும் அவர் செருப்பு அணிவதில்லை. வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மட்டும் மேடையில் செருப்பு போடாமல் இருக்க முடியாது என்பதால் அங்கு மட்டும் அணிவார்; அந்த நிகழ்ச்சிகள் முடிந்த உடனேயே செருப்பை கழற்றிவிடுவார்."

வாட்சு

4 ஆயிரம் ரூபாய் வாட்சு

மகள் மீரா நினைவுகள் குறித்து பாத்திமா மேலும், "விஜய் ஆண்டனி கையில் கட்டியிருக்கும் வாட்ச் கடந்த 3, 4 ஆண்டுகளாக ஒரே வாட்சாகவே இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். மீரா ஆசைப்பட்டு கேட்டதால் அந்த வாட்சை வாங்கித் கொடுத்தேன்; அதன் விலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் தான் இருக்கும். கடைசியாக மீரா அந்த வாட்சைத்தான் அணிந்திருந்தாள்."

"அவரிடம் இருந்த விலையுயர்ந்த ராடோ, ரோலக்ஸ் வாட்சுகளை எல்லாம் என்னிடம் குப்பை மாதிரி கொடுத்துவிட்டு, மீரா ஆசையாக கட்டிய அந்த வாட்சை மட்டுமே அவர் எப்போதும் கையில் கட்டித் திரிகிறார். அவரிடம், 'ரத்த அழுத்தம் பார்க்கும் நவீன வாட்ச் வாங்கித் தருகிறேன்' என்று கூறினாலும், 'இது மீரா வாட்ச், இதில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன்' என்று மறுத்துவிடுகிறார்."

ADVERTISEMENT

நினைவறை

மீராவின் நினைவறை

தொடர்ந்து பேசிய அவர், "மகளின் நினைவாக அவளது அறையை நாங்கள் இதுவரை அப்படியே வைத்திருக்கிறோம். விரைவில் அந்த அறையை எங்கள் அறையாக மாற்றிக் கொள்ளப் போகிறோம்" என்று கூறி மேடையிலேயே கண்ணீர் விட்டுக் கலங்கினார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீராவின் நினைவுகளுடன் விஜய் ஆண்டனி வாழ்ந்து வரும் விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ADVERTISEMENT