மணல் குவாரி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த FIR விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரி முறைகேடு தொடர்பாக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் 17 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) கடந்த நவம்பர் 5-ஆம் தேதி பதிவு செய்த FIR-இன் திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன. 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதன் மூலம், மாநில அரசுக்கு ரூ.1,427.34 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கியக் குற்றச்சாட்டுகள்
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், ஆற்று மணல் அள்ளுதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வெளிப்படையான நடைமுறைகளைத் தவிர்க்குமாறு, நீர்வளத்துறை செயலாளர்கள் மூலமாக முதன்மைப் பொறியாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்குத் துரைமுருகன் "நேர்மையற்ற முறையிலும், உள்நோக்கத்துடனும் சைகை காட்டியுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகளை மீறி, எஸ். ராமச்சந்திரன், பி. கரிகாலன், கே. ரத்தினம் ஆகிய தனியார் நபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்ததாகவும், இதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு
போலி அனுமதிச் சீட்டுகள் & டெண்டர் முறைகேடு
பொது டெண்டர்களுக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளியது மற்றும் சட்டவிரோதமாக மணல் கடத்துவதற்குப் போலி அனுமதிச் சீட்டுகளை தயாரித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டு போகும் என்பதும், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நதிக்கரைச் சூழலியல் பாதிக்கப்படும் என்பதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும் என எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 28 மணல் குவாரிகளில் ஏச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில் மற்றும் ஒருவந்தூர் ஆகிய 4 குவாரிகளில் மட்டும் நடத்தப்பட்ட மதிப்பீட்டில், சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணல், 1,42,73,424 யூனிட்கள். அதனால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு ரூ.1,427.34 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
அரசுப் பொறியாளர்கள்
வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 17 அதிகாரிகளின் விவரம்
முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் சேர்த்து 17 அரசுப் பொறியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற முதன்மைப் பொறியாளர்கள்: முத்தையா, ராமமூர்த்தி.
செயற்பொறியாளர்கள்(ஓய்வு & பணியில் உள்ளவர்கள்): ஜி.ஆர். சுகந்தி(சென்னை - ஓய்வு), ஆர். இளங்கோவன்(திருச்சி - ஓய்வு), மறைந்த எஸ். லெனின் பிரான்சிஸ் (விழுப்புரம்), என். அன்புசெல்வம் (மதுரை - பணியில்), பி. முருகவேல் (திருச்சி - பணியில்).
உதவிச் செயற்பொறியாளர்கள்:எஸ். சம்பத் (வேலூர் - ஓய்வு), என். சிவகுமார் (திருச்சி - ஓய்வு), ஆர். பாலாஜி (விழுப்புரம்), ஆர். அருள்மணி (திருச்சி).
ஆர். தேவராஜ் (வேலூர்), ஏ. சுரேஷ் குமார் (விழுப்புரம்), ஆர். தீபாவதி / தீபாவணி (விழுப்புரம்), ஜே. சாதிக் பாட்சா, சி. சுகுமார், ஆர். சங்கீதா (திருச்சி).