சீனாவில் இன்று சந்திக்கும் டிரம்ப்-புடின்-ஜி ஜின்பிங்: உக்ரைன் போர், அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து மூன்று தலைவர்களின் திட்டம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்கின்றனர். சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் Yalta 2.0 என வர்ணிக்கப்படும் இந்த மாநாட்டில், மூன்று தலைவர்களும் தங்களது தனித்தனி முக்கிய இலக்குகளுடன் களமிறங்கியுள்ளனர். (இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1945-ல் நடந்த யால்டா மாநாட்டில் பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் கூடி போருக்கு பிந்தைய ஐரோப்பாவின் வரைபடத்தைத் தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.
அஜெண்டா
மூன்று வல்லரசு தலைவர்களின் முக்கியத் திட்டங்கள்
ரஷ்யா: ஐரோப்பிய நாடுகளின் தலையீடு இல்லாமல் போர் நிறுத்த நிபந்தனைகளை நிர்ணயிக்க புடின் விரும்புகிறார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே உலகின் புவிசார் அரசியலைத் தீர்மானிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
அமெரிக்கா: அணு ஆயுதக் குறைப்பு குறித்துப் பேச டிரம்ப் விரும்பினாலும், "அணு ஆயுதங்களைக் கைவிடுவோம் எனச் சொல்வது கடினமான விஷயம்" என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஈரான் விவகாரம் மற்றும் வர்த்தக பிரச்சினைகளும் அவரது பட்டியலில் உள்ளன.
சீனா: மாநாட்டை நடத்தும் தலைவராக தனது செல்வாக்கை உயர்த்த ஜி ஜின்பிங் விரும்புகிறார். உக்ரைன் போரில் ரஷ்யா தோற்பது மேற்கத்திய நாடுகளின் வெற்றியாகிவிடும் என்பதால், ரஷ்யா தோற்கக் கூடாது என்பதில் சீனா உறுதியாக உள்ளது.
அணு ஆயுதம்
அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் சீனாவின் தயக்கம் ஏன்?
அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தம் என்பது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மட்டுமே இருக்க வேண்டும் என சீனா கருதுகிறது.
உலகின் மொத்த அணு ஆயுதங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமே உள்ளன (பென்டகன் மதிப்பீட்டின்படி சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன).
ரஷ்யாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையை விட, அமெரிக்காவுடன் நேரடியாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதையே சீனா விரும்புகிறது.
இதன் மூலம் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது போன்ற தனது முக்கிய விவகாரங்களில் அழுத்தம் கொடுக்க முடியும் எனச் சீனா கணக்கிடுகிறது.
இந்த முக்கியப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் சேர்க்கப்படாததால், ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மற்றும் தைவான் ஆகியவை இச்சந்திப்பை மிகுந்த எச்சரிக்கையுடன் உற்றுநோக்குகின்றன.