பாகிஸ்தான் அமைச்சர் டெல்லி வருகைக்கு இடையே சிந்து நதி நீர் ஒப்பந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா திட்டவட்டம்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தில் பங்கேற்க பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இக்கருத்தை உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் அமைச்சர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து முன்பு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்குப் பிந்தைய முதல் வருகையும்
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 26 உயிர்களை பலிவாங்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது.
மேலும் கடந்த ஆண்டு மே 7 முதல் 10 வரை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் ராணுவ மோதல்களுக்குப் பிறகு இரு நாடுகளிடையே உறவுகள் முடங்கியிருந்தன.
இந்நிலையில் அமைப்பின் மரபுப்படி கடந்த அக்டோபர் 28 அன்று விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தற்போது டெல்லி வந்துள்ளார்.
பதிலளிக்க திணறிய பாகிஸ்தான்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் அமைச்சர்
புரானா கிலாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தின் தொடக்க நிகழ்வில் பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் பங்கேற்றார்.
நிகழ்வின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நேரடியாகப் பதிலளிக்கத் திணறிய அவர் நாளை தனது உரைக்குப் பிறகு நிறைய உரையாடலாம் எனக் கூறி நழுவினார்.
அதற்குப் பதிலாக பிராந்திய நாடுகளுக்கு இடையிலான நாகரிக உரையாடல் வரவேற்கத்தக்க முயற்சி என அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய ஒத்துழைப்பு
இருதரப்புப் பிரச்சினைகளை தாண்டி பிராந்திய ஒத்துழைப்பு அவசியம் என மாலிக் கருத்து
மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் நாடுகள் தனிப்பட்ட இருதரப்புப் பிரச்சினைகளை தாண்டி பரந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என முசாதிக் மாலிக் கூறினார்.
பிராந்தியத்தின் கூட்டு நலன்களை முன்னேற்றும் வகையில் அரசியல் மற்றும் சமூக சவால்களை உரையாடல் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நாகரிகங்கள் உரையாடல் மன்றத்திற்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் நேர்மறையான திசையில் நகரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இருப்பினும் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இருதரப்புப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.