அருணாச்சல பிரதேசத்தில் 11,200 MW சியாங் அணை ஆரம்பக்கட்ட ஆய்வுக்கே வெடித்த போராட்டம்; முழு பின்னணி
செய்தி முன்னோட்டம்
அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 11,200 மெகாவாட் திறன் கொண்ட சியாங் மேல்நிலை பல்நோக்குத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் ஆய்வுப் பயணமாக அங்கு சென்றுள்ளார். சியாங், மேல் சியாங் மற்றும் கிழக்கு சியாங் மாவட்டங்களில் தேசிய நீர்மின் கழகம் மூலமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் மற்றும் நீர் சேமிப்புத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சியாங் பள்ளத்தாக்கு மக்களின் கவலைகளைத் தாம் புரிந்துகொள்வதாகவும், நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
திபெத்
திபெத்தில் சீனா கட்டி வரும் 60,000 MW அணையும் இந்தியாவின் நீர் பாதுகாப்பு வியூகமும்
வழக்கமான மின் உற்பத்தி நிலையங்களைப் போலல்லாமல், இந்தத் திட்டம் ஒரு மூலோபாய நீர் சேமிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அணையாகவே மத்திய மற்றும் மாநில அரசுகளால் வரையறுக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் யார்லுங் சாங்போ என உற்பத்தியாகி அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங்காகப் பாயும் நதியின் 65 சதவீத நீர் சீனாவிலிருந்தே வருகிறது.
கடந்த 2025 ஜூலை மாதம் இந்திய எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெடாக் பகுதியில் சீனா 60,000 மெகாவாட் பிரம்மாண்ட அணையைக் கட்டத் தொடங்கியுள்ளதால் திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி அபாயங்களைத் தடுக்க இத்திட்டம் அவசியம் என முதல்வர் பெமா காண்டு விளக்கியுள்ளார்.
பழங்குடியின மக்களின் எதிர்ப்பு
ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆதி பழங்குடியின மக்களின் எதிர்ப்பும் அக்டோபர் வன்முறையும்
தற்போது அணை கட்டுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், நிலநடுக்க அபாய மண்டலத்தில் இத்திட்டம் சாத்தியமா என்பதை அறியும் தொழில்நுட்ப ஆய்வு மட்டுமே நடைபெறுகிறது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த ஆய்வே அணை கட்டுவதற்கான முதல் படி எனக் கருதும் ஆதி பழங்குடியின அமைப்புகள், தங்களது பூர்வீக கிராமங்கள், நெல் வயல்கள் மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்கள் மூழ்கிவிடும் என எதிர்த்துப் போராடி வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் நான்கு செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தில் பாசிகாட்டில் உள்ள அலுவலகம் மற்றும் காவல்துறை வாகனங்கள் தீவைக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதக் காவல் படை கம்பெனிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
மறுவாழ்வுக் குழு
மத்திய படைகளைத் திரும்பப் பெற போராட்டக் குழு நிபந்தனையும் மறுவாழ்வுக் குழு அமைப்பும்
மத்திய படைகளைத் திரும்பப் பெற்று போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வரை அமித் ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்க முடியாது என சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றம் அறிவித்துள்ளது.
அதேசமயம் நில கையகப்படுத்தல் சட்டம் 2013-ன் கீழ் மக்கள் ஒப்புதல் இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளித்துள்ள பெமா காண்டு அரசு, நில நிர்வாக செயலாளர் தலைமையில் இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக் குழுவை அமைத்துள்ளது.
மேலும் எவ்வளவு பகுதிகள் மூழ்கும் என்ற துல்லியமான பாதிப்பை அறிந்து கொள்ளவே ஆரம்பக்கட்ட ஆய்வு அவசியம் எனப் பாசிகாட் மேற்கு எம்எல்ஏ நினோங் எரிங் வலியுறுத்தியுள்ளார்.