ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை
ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" எனவும், பாஜக அங்கு மட்டும் தான் வெற்றி பெற முடியும் எனவும், திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பதிலடி வழங்கி உள்ள பாஜக, வடமாநில மக்கள் குறித்த திமுக எம்பியின் கருத்துக்கு, அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உடன்படுகிறதா என, ராகுல் காந்தி இடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய செந்தில்குமார், "இந்தியின் இதயப் பகுதியான மாநிலங்களிலும், பொதுவாக கௌமுத்ரா மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களிலும்" வெற்றி பெறுவதுதான் பாஜகவின் பலம் என்று, இந்த நாட்டு மக்கள் நினைக்க வேண்டும் என பேசினார்.
தென்னிந்தியாவில் பாஜக கால் பதிக்க முடியாது என திமுக எம்பி சூளுரை
சமீபத்தில் வெளியான 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக வென்ற நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதை சுட்டிக்காட்டியே, எம்பி செந்தில்குமார் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் பேசிய செந்தில் குமார், "உங்களால் (பாஜக) தென்னிந்தியாவிற்கு வர முடியாது. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து முடிவுகளையும் நீங்கள் பார்க்கிறீர்கள்... நாங்கள் அங்கு மிகவும் பலமாக இருக்கிறோம்" என்றார். மேலும், தென்னக மாநிலங்களில் பாஜக கால் பதிக்க முடியாததால், அந்த மாநிலங்களை, பாஜக யூனியன் பிரதேசங்களாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அவர் பேசினார்.
இது சர்ச்சை அல்ல, இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுதான்- எம்பி செந்தில்குமார்
நாடாளுமன்றத்தில் எம்பி செந்தில்குமார் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், இது சர்ச்சை அல்ல எனவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர், அவையினர், சபாநாயகர் முன்னிலையில் தான் இதை பயன்படுத்தியதாகவும், இந்த வார்த்தையை, அவர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வார்த்தை புண்படுத்தியிருந்தால், அடுத்த முறை அந்த மாநிலங்களை குறிக்க வேறு சொற்களை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செந்தில்குமார் பேசியது மற்றும் அவரின் விளக்கம்
திமுக எம்பியின் கருத்திற்கு அண்ணாமலை கண்டனம்
எம்பி செந்தில்குமார் பேச்சுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி வழங்கியுள்ளார். திமுகவினரின் பேச்சு சென்னையைப் போல் "மூழ்கிக் கொண்டிருக்கிறது" மற்றும் திமுகவின் "ஆணவமே" அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் எனவும், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் முன்னாள் கர்நாடக அமைச்சர் கேடி ரவி, செந்தில்குமாரின் இந்த பேச்சுடன் ராகுல் காந்தி உடன்படுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எம்பி செந்தில்குமார் கடந்த ஆண்டும் இதே போல், வட இந்திய மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என மக்களவையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.