கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் தமிழ்நாட்டில் நாகை, அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருவதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடலோர மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்க கூடும் எனவும், அது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று மிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.