சீன உளவுப் பெண்ணுடன் காதலா? என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் விவகாரத்தில் FBI விசாரணை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீனா அரசாங்கத்தின் உளவுப் பெண் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் வைத்திருந்த தொடர்பு குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) விசாரணை நடத்தி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் ஜென்சன் ஹுவாங்கிடம் பேசியதாகவும், அந்தப் பெண் ஒரு உளவுப் பிரதிநிதி என்பது தனக்கு எதுவும் தெரியாது என ஹுவாங் தெரிவித்ததாகவும் கூறினார்.
FBI
"ஹுவாங் நல்ல முறையில் மீண்டு வருவார்"
அதிபர் டிரம்ப்,"FBI இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்பதை நான் அறிவேன். ஹுவாங் இந்தச் சிக்கலில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்".
"சம்பந்தப்பட்ட நபர் ஒரு சீன உளவுப் பெண் என்பது குறித்துத் தனக்கு முற்றிலும் எதுவும் தெரியாது என அவர் என்னிடம் கூறினார். ஜென்சன் ஹுவாங் ஒரு நேர்மையான மனிதர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை" என்றார்.
அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் போது இந்த விவகாரத்தைக் கொண்டு வருவீர்களா? என்ற கேள்விக்கு, "சீன அதிபரே இது குறித்து என்னிடம் கேட்கக்கூடும்; நான் இதைக் கொண்டுவருவேனா என்பது உறுதியில்லை"* என டிரம்ப் பதிலளித்தார்.
விசாரணை
என்விடியா சுயாதீன விசாரணை, ஜென்சன் ஹுவாங் பகிரங்க மன்னிப்பு
அன்னிய உளவு அமைப்பின் இலக்காக ஜென்சன் ஹுவாங் இருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இது குறித்து தங்கள் நிறுவனம் சார்பில் சுயாதீன விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக என்விடியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
முன்னதாக, ஒரு தொழில் பெண்மணியுடன் தனக்கு இருந்த நெருங்கிய தொடர்பு குறித்து ஒப்புக்கொண்ட ஹுவாங், தனது மனைவி மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களிடம் என்விடியா வலைதளத்தில் வெளியிடப்பட்ட திறந்த மடல் மூலம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
"நிறுவனத்தின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். எங்கள் நாட்டையும் நிறுவனத்தையும் நான் நேசிக்கிறேன். என்விடியா மற்றும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் நான் முழு உறுதியுடன் இருக்கிறேன்" என அதில் தெரிவித்தார்.
விவரங்கள்
சீன உளவுப் பெண் யார்?
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்க உளவுத்துறை நடத்திய விசாரணையில் அந்தப் பெண் சீன அரசாங்கத்திற்காக தகவல் சேகரித்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் இன்டர்நேஷனல் என்ற தரவு மைய நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட என்விடியா சிப்களை சீனாவுக்கு சட்டவிரோதமாக கடத்தியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்த நிறுவனமாகும்.
அமெரிக்காவின் இந்தச் குற்றச்சாட்டுகளைச் சீனா கடுமையாக மறுத்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "சீன உளவு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; இது சீனாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.