பிரிட்டன் RAF விமான தளம் அருகே வெடிகுண்டு தாக்குதல் சதி: ஈரானுக்கு தொடர்பா?
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனில் அமெரிக்காவின் அதிநவீன நீண்டதூர போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள RAF ஃபேர்ஃபோர்ட் விமானப்படை தளத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், ஈரானின் பின்னணி குறித்து பயங்கரவாத எதிர்ப்பு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேர்ஃபோர்ட் விமானப்படைத் தளத்தை நோக்கிச் சென்ற 3 சந்தேகத்திற்குரிய வேன்களை கண்ட உள்ளூர் விவசாயி அளித்த 999 அவசர அழைப்பைத் தொடர்ந்து, போலிஸார் விரைந்து செயல்பட்டு 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வேன்களில் IED இருந்ததாகவும், ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் அவற்றின் தீவிரத்தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தகவல்கள்
ஈரான் கோணம் மற்றும் முரண்பட்ட தகவல்கள்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்த RAF ஃபேர்ஃபோர்ட் தளத்தை பயன்படுத்தி வருவதால், இத்தாக்குதல் சதியில் ஈரானியப் புரட்சிகரப் படையின் (IRGC) தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், "ஈரான் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்தவொரு ராணுவத் தளமும் இலக்காக்கப்படும்" என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சந்தேக நபர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறையினரின் கண்காணிப்பில் அவர்கள் ஏற்கெனவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரிலேயே கைது நடவடிக்கைகள் நடைபெற்றதாக பிரிட்டன் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இக்கூற்றில் முரண்பாடு நிலவுகிறது.