Loading...
FedEx Panda Express விமானத்தில் அட்லாண்டா பறந்த 2 சீன பாண்டாக்கள்! அமெரிக்கா - சீனா இடையே மலரும் புதிய நட்பு
FedEx Panda Express விமானத்தில் அட்லாண்டா பறந்த 2 சீன பாண்டாக்கள்

FedEx Panda Express விமானத்தில் அட்லாண்டா பறந்த 2 சீன பாண்டாக்கள்! அமெரிக்கா - சீனா இடையே மலரும் புதிய நட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 28, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் 'பிங் பிங்' மற்றும் 'ஃபு ஷுவாங்' என்ற இரு ஜெயண்ட் பாண்டாக்கள் சீனாவிடமிருந்து அமெரிக்காவின் அட்லாண்டா உயிரியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்துள்ளன. 6 வயதான ஆண் பாண்டாவான பிங் பிங் (அர்த்தம்: அமைதி) மற்றும் 5 வயதான பெண் பாண்டாவான ஃபு ஷுவாங் (அர்த்தம்: இரட்டை ஆசிகள்) ஆகியவை சீனாவின் செங்டு ஆராய்ச்சி மையத்திலிருந்து சிறப்பு 'FedEx Panda Express' போயிங் 777 விமானம் மூலம் 16 மணி நேர பயணத்திற்கு பிறகு அட்லாண்டா வந்தடைந்தன.

பயணம்

பயணம் & தனிமைப்படுத்தல்

இந்த பாண்டாக்கள் பிரத்யேகக் கூண்டுகளில், அவற்றுக்கு விருப்பமான மூங்கில், நீர் மற்றும் பிற உணவுகளுடன் கொண்டு வரப்பட்டன.

உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட புதிய வளாகத்தில் இப் பாண்டாக்கள் சுமார் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

அதன் பிறகே பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.

முக்கியத்துவம்

பாண்டா ராஜதந்திரம் & சர்வதேச முக்கியத்துவம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற மறுநாளே இப்பாண்டாக்கள் அமெரிக்கா வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனா தனது பாண்டாக்களை 'நட்பின் தூதர்களாக' பயன்படுத்தி வருகிறது. அட்லாண்டா உயிரியல் பூங்காவுடன் கையெழுத்தான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இப் பாண்டாக்கள் பராமரிக்கப்படவுள்ளன.

இதற்காக ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் கட்டணமாக வழங்கப்பட்டு, அக்கட்டணம் பாண்டாக்கள் பாதுகாப்பு நிதியத்திற்குப் பயன்படுத்தப்படும்.

உலகளவில் காடுகளில் வெறும் 1,900 பாண்டாக்கள் மட்டுமே வாழும் நிலையில், சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் (IUCN) இவை 'பாதிக்கப்படக்கூடியவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அட்லாண்டா பூங்காவில் இப் பாண்டாக்கள் இணைக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கப் பராமரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT