காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன போர், 32வது நாளாக நீடித்து வரும் சூழ்நிலையில், தற்போது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, "நாங்கள் ஹமாஸை தோற்கடிப்போம்", "காஸா மக்களுக்கும், மத்திய கிழக்கு மக்களுக்கும் உண்மையான எதிர்காலத்தை, நம்பிக்கையின் எதிர்காலத்தை வழங்குவோம். ஆனால் இதற்கு வெற்றி தேவை" என சமீபத்திய நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.
போர் இடைநிறுத்தம் குறித்து பேசிய நெதன்யாகு
மேலும் பேசியவர், போருக்குப் பிறகு "காலவரையற்ற காலத்திற்கு" இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பு இருப்பதாக அவர் நினைப்பதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போரில் இடைநிறுத்தம் விட இஸ்ரேலை வலியுறுத்தி வருவதற்கு பதில் அளித்தவர், " ஒரு மணி நேரம் போன்ற சிறிய இடைநிறுத்தங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே அவற்றைப் வழங்கியுள்ளோம்", "அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கும், இஸ்ரேல் பணயக் கைதிகள் மற்றும் தனிப்பட்ட பணயக் கைதிகள் வெளியேறுவதற்கும் சூழ்நிலைகளை சரிபார்ப்போம் என்று நினைக்கிறேன்" "ஆனால் ஒரு பொதுவான போர்நிறுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் கோரும் ஐநா அமைப்பு
காசாவில் இருக்கும் சர்வதேச அமைப்புகள், மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்க்க போதிய பொருட்கள் இல்லை எனவும், உணவு, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். "எங்களுக்கு உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் தேவை. போர் தொடங்கி 30 நாட்கள் ஆகிவிட்டது. இது இப்போது நிறுத்தப்பட வேண்டும்" என மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் வோல்கர் டர்க், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஐநா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் மற்றும் பல்வேறு ஐக்கிய நாடுகளின் சபையின் உயர் அதிகாரிகள் இடமிருந்து வந்த அறிக்கை தெரிவித்தது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனிதாபிமான உதவிகளை காசாவிற்கு அனுப்ப போரில் இடைநிறுத்தத்திற்கு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.