ஐ.நா-வில் பெரும் பரபரப்பு: நெதன்யாகு பேசத் தொடங்கியதும் கதவைத் திறந்து வெளிநடப்பு செய்த தலைவர்கள்
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரை ஆற்றத் தொடங்கியபோது, பல நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ராஜதந்திரிகள் அவையை விட்டு வெளியேறியபோது, மீதமிருந்த ஆதரவாளர்கள் "அம் யிஸ்ரேல் சாய்" (இஸ்ரேல் மக்கள் வாழ்க) என முழக்கமிட்டனர். வெளிநடப்பு செய்தவர்களை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, "இந்த அவையில் இன்னும் மனசாட்சியற்ற கோழைகள் யாராவது இருந்தால், தயவுசெய்து இப்பொழுதே வெளியேறுங்கள்" எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
ஈரான்
ஈரான் தாக்குதலுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்துப் பேசிய நெதன்யாகு,"ஈரானின் அணுசக்தி மையங்களை அழித்தது கடினமான முடிவு. ஆனால், அதைச் செய்யாவிட்டால் நாம் அனைவரும் உயிருடன் இருந்திருக்க முடியாது. இப்போது வெளிநடப்பு செய்த பல நாடுகளின் தலைவர்கள், ஈரானை அழித்ததற்காக தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் பொதுவெளியில் இப்படி வெளிநடப்பு செய்வது அவர்களின் போலித்தனத்தைக் காட்டுகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இஸ்ரேலை 'காலனித்துவம்' என்று விமர்சிப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
லெபனானில் நடத்தப்பட்ட பேஜர் குண்டுவெடிப்பு தாக்குதலை நினைவுகூர்ந்த நெதன்யாகு, மேடையில் ஒரு பேஜரை உயர்த்திக் காட்டினார்.
ஹெஸ்புல்லாவிடம் இருந்த 1.5 லட்சம் ஏவுகணைகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அந்த அமைப்பின் தலைவர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல்
சர்வதேச தலைவர்கள் மீது சரமாரி தாக்குதல்
கத்தார் நாட்டின் அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான பொய்களைப் பரப்புவதாகவும், துருக்கி அதிபர் எர்டோகன் யூத எதிர்ப்பு பொய்களை பரப்பும் சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும் சாடினார்.
சிரிய அதிபர் அகமத் அல்-ஷாராவுக்கு பதிலளித்த அவர், பைபிள் காலத்திலிருந்தே கோலன் குன்றுகளில் யூதர்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தைரியமான தலைமையை மேடையில் பாராட்டிய நெதன்யாகு, தனது நியூயார்க் பயணத்தை மிக சுருக்கமாக முடித்துக் கொண்டு உடனே இஸ்ரேல் திரும்பினார்.