2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம். பாலத்தீன போர், துருக்கி நிலநடுக்கம், டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து என்று உலக அளவில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு நடந்திருக்கிறது. அந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் 2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா
கடந்த மே 6 ஆம் தேதி இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது. பிரிட்டனின் முன்னாள் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, அவரது மகன் அரியணை ஏறினார். இதனையடுத்து, கடந்த மே மாதம் முழுவதும் லண்டன் மாநகரமே கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. அந்த விழாவிற்கு, உலகின் பல முக்கிய பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, இந்தியா உட்பட இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த அனைத்து நாடுகளும் இந்த விழாவில் கலந்துகொண்டன.
துருக்கி - சிரியா நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் மையம் கொண்டிருந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டுக்கு பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும். துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், அந்த ஒரு நிலநடுக்கத்தோடு முடிந்து விடும் என்று நினைத்திருந்த நிலையில், அடுத்து வந்த 3 மாதங்களுக்குள் 30,000க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் அந்நாட்டில் பதிவாகியது. இந்த வருடம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால், துருக்கியில் 50,783 பேரும், சிரியாவில் 8,476 பேரும் உயிரிழந்தனர். உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 59,259 ஆகும்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் நசுங்கிய சம்பவம்
அமெரிக்காவில், 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் நொறுங்கி, அதில் பயணம் செய்து ஐந்து கோடீஸ்வரர்கள் கடந்த ஜூன் 18ஆம் தேதி உயிரிழந்தனர். பொதுவாக, நீர்மூழ்கிக் கப்பல்களையெல்லாம், ஸ்டீல், டைட்டானியம் மற்றும் அலுமினியும் உள்ளிட்ட கடினமான உலோகங்களைக் கொண்டு உருவாக்குவார்கள். ஆனால், இந்த டைட்டன் நீர்மூழ்கியை, பரிச்சார்த்த முயற்சியாக கார்பன் ஃபைபரைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். அது பயணம் செய்த ஆழத்தில், ஒரு சதுர அங்குலத்திற்கு 2,500 கிலோ அழுத்தத்தைத் தாங்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வளவு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் டைட்டன் நீர்மூழ்கியானது, கடலுக்கு அடியில் உள்நோக்கி வெடித்து(Implode) நசுங்கியது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம் வெற்றி
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி 9-வது சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார். சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தோற்கடித்து, தர்மன் சண்முகரத்தினம் வெற்றி வாகை சூடினார். இந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்களான எங் கோக் சாங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் 15.7 சதவீதம் மற்றும் 13.88 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர். தர்மன் சண்முகரத்தினம், இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரது மூதாதையர்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர்.
இந்தியா-கனடாவுக்கு இடையே ஏற்பட்ட பெரும் பிளவு
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் . ஆனால், இதுவரை கனடா சரியான ஆதாரங்களை கொடுக்கவில்லை என்று இந்தியா கூறி வருகிறது. இந்த பிரச்சனையில், இந்தியாவில் இருந்த கனட தூதுரக அதிகாரிகள் அனைவரும் வெற்றியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் இன்னும் சூடு குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது திடீர் வான் வழி தாக்குதலை நடத்தியது. அப்போது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, இரண்டு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 17,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். நடுவில் சில நாட்கள் போர் இடைநிறுத்தம் செய்யப்பட்ட போது சில பிணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. ஆனால், அதற்குபின் "ஒப்பந்தங்கள் மீறப்பட்டதால்" மீண்டும் போரை தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இலங்கை பொருளாதார வீழ்ச்சி: ராஜபக்சே நாடு தப்பியது
இலங்கைப் பொருளாதார நெருக்கடி என்பது 2019இல் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து வரும் நெருக்கடியாகும். 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இலங்கையின் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 50% ஆக உயர்ந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, எரிபொருள் விற்பனை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், பொருட்களைப் பாதுகாக்க பள்ளிகள் கூட மூடப்பட்டன. தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால்பெரிய எதிர்ப்புகளை எதிர்கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்ஷ கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி விலகி, நாடு தப்பினார். எனினும், இப்போது வரை இலங்கை, சீனாவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர்களும் இந்தியாவுக்கு சுமார் 1 பில்லியன் டாலர்களும் கடன்பட்டுள்ளது.
நியூசிலாந்து தேர்தல் 2023
கடந்த ஜனவரி மாதம், நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டென் பதவி விலகினார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் ஹிப்கின்ஸ் என்பவர் 9 மாதங்கள் நியூசிலாந்தின் பிரதமராக இருந்தார். இந்நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி அந்நாட்டின் 54வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பொதுத் தேர்தல் நடைபெற்றது. கலப்பு-உறுப்பினர் விகிதாச்சார (MMP) வாக்களிப்பு முறையின் கீழ் 122 உறுப்பினர்கள் இந்த தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தேர்தலின் போது, ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை வீழ்த்தி பழமைவாத கட்சியான தேசிய கட்சி கூட்டணி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் நவம்பர் 27ஆம் தேதி நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார்.