
அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவ்வூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போலவே, முக்கிய பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரையும் இஸ்லாமாபாத் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திங்களன்று இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனலான i24-க்கு அளித்த பேட்டியில், சிங், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இது தூண்டப்பட்டதாகவும் கூறினார்.
போர் நிறுத்தம்
போர் நிறுத்தம் இடைநிறுத்தம் மட்டுமே என இந்திய தூதர் உறுதி
போர் நிறுத்தம் நீடிக்குமா என்று கேட்டதற்கு, "ஆம், ஆபரேஷன் சிந்தூர் இடைநிறுத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது" என மீண்டும் வலியுறுத்தினார்.
"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். நாங்கள் ஒரு புதிய இயல்பை அமைத்துள்ளோம், மேலும் புதிய இயல்பானது மூலம் ஒரு தாக்குதல் உத்தியைப் பின்பற்றுவோம். பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அந்த பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டும், அவர்களின் உள்கட்டமைப்பை அழிக்க வேண்டும். எனவே அது இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நாம் பேசும்போது போர்நிறுத்தம் இன்னும் அப்படியே உள்ளது" என்று சிங் வலியுறுத்தினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சித்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் சரியே என வலியுறுத்தல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) நிறுத்தி வைப்பது ஒரு "போர் நடவடிக்கை" என்ற பாகிஸ்தானின் கூற்றை நிராகரித்த சிங், ஒப்பந்தத்தின் கொள்கைகளான நல்லெண்ணம் மற்றும் நட்புறவை பாகிஸ்தான் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை என்று கூறினார்.
"நாங்கள் தண்ணீரைப் பாய அனுமதித்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் பாய அனுமதித்தது," என்று அவர் கூறினார்.
"நமது பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார் - இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது." பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதால் இந்தியாவில் பொதுமக்கள் விரக்தியடைந்ததால் ஒப்பந்தம் கைவிடப்பட்டது என்று சிங் கூறினார்.
பயங்கரவாதிகள்
"பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் தீவிரவாதிகள்"
பல வருட ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் பெரிய தாக்குதல்களுக்குப் பொறுப்பான லக்வி, ஹபீஸ் சயீத் மற்றும் சஜித் மிர் போன்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து சுதந்திரமாக இருப்பதை சிங் எடுத்துரைத்தார்.
"நாங்கள் ஆவணங்களையும் தொழில்நுட்ப உள்ளீடுகளையும் வழங்கியுள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும், இந்த நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்," "அமெரிக்கா ராணாவை ஒப்படைக்க முடியும் போது, பாகிஸ்தானால் ஏன் இந்த பயங்கரவாதிகளை ஒப்படைக்க முடியாது?" என்று அவர் கூறினார்.
பஹல்காம் தாக்குதலை விசாரிக்க பாகிஸ்தானின் முன்மொழிவை இந்தியா திசைதிருப்பியது என்ற குற்றசாட்டை சிங் நிராகரித்தார். அதோடு, மேலும் மும்பை, பதான்கோட் மற்றும் புல்வாமா தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன ஆனது என்று கேட்டார்.