இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வெள்ளை மாளிகையின் இறுதி எச்சரிக்கையாக கருத வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போரில், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள முதல் கடுமையான நிலைப்பாடு இதுவாகும். காசாவில், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் உட்பட ஏழு உணவு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
காசா போர் நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்த அமெரிக்கா
33,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட காசாவில், இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்ததுடன், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் சுமார் 100 பணயக்கைதிகளை விடுவிக்க உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, பாலஸ்தீனிய குடிமக்களும், வெளிநாட்டு உதவிப் பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கான தனது ஆதரவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று பைடன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் கூறினார். பைடன் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்க ஜனாதிபதி, போருக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி ஏதும் பேசவில்லை என்றும், நெதன்யாகு உடனான இந்த உரையாடல் நேரடியாகவும், நேர்மையாகவும் இருந்தது என்று தெரிவிக்கிறார்கள்.