ஒருநாள் உலகக்கோப்பை : அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் 6 அணிகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதோடு, இதுவரை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த அணிகளாக உள்ளன.
பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் சனிக்கிழமை (நவம்பர் 4) நடந்த தங்களுடைய ஆட்டங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளன.
இதனால் தற்போதைய நிலையில், மூன்று மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் ஆறு அணிகள் உள்ளன.
அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள அந்த ஆறு அணிகளையும், அவற்றிற்கான அரையிறுதி வாய்ப்புகள் குறித்தும் இதில் பார்க்கலாம்.
Australia ranks in 3rd position with 10 points
ஆஸ்திரேலியா (10 புள்ளிகள்)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்கள் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியைத் தழுவினாலும், அதற்கடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக விளையாட உள்ளது.
இதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவினால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க நேரிடும்.
New Zealand ranks 4th position with 8 points
நியூசிலாந்து (8 புள்ளிகள்)
8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நான்காவது இடத்தில் உள்ளது.
முந்தைய 2019 தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து இந்த முறை முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், அடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.
மேலும் ,அந்த அணியின் அடுத்தடுத்து பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரு போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதோடு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தோற்றால் மட்டுமே அரையிறுதியை உறுதி செய்ய முடியும்.
Pakistan ranks 5th position with 8 points
பாகிஸ்தான் (8 புள்ளிகள்)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி, தோல்விகளுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
நியூசிலாந்தைப் போன்ற அதே நிலையில் பாகிஸ்தானும் உள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள ஒரு போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
மேலும், நியூசிலாந்து நிகர ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளதால், இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும்.
இல்லையெனில், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
Afghanistan ranks 6th position with 8 points
ஆப்கானிஸ்தான் (8 புள்ளிகள்)
ஆப்கான் கிரிக்கெட் அணி தற்போது 7 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அந்த போட்டிகள் இரண்டிலும் வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துவிடும்.
ஆனால், ஆஸ்திரேலியாவும் அரையிறுதி வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதால், போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் தங்கள் போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.
Srilanka ranks 7th position with 4 points
இலங்கை (4 புள்ளிகள்)
இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
இதனால், அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பே இல்லை எனக் கூறப்பட்டாலும், உண்மையில் இலங்கைக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உண்டு.
அடுத்து வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் அடுத்து மோத உள்ள இலங்கை, இந்த இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தவிர, மேலே குறிப்பிடப்பட்ட அணிகள் தங்கள் மீதமுள்ள ஆட்டங்களில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
இவை அனைத்தும் நடந்தால், இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.
Netherlands ranks 8th position with 4 points
நெதர்லாந்து (4 புள்ளிகள்)
இலங்கையைப் போலவே நெதர்லாந்து கிரிக்கெட் அணியும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளனர்.
அவர்கள் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக எஞ்சியிருக்கும் போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இது சாத்தியமாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டாலும், வலுவான தென்னாப்பிரிக்காவை ஏற்கனவே நெதர்லாந்து வீழ்த்தியுள்ளதால், எதுவும் சாத்தியம் தான் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும்.