Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்து இடைக்கால குழுவை அமைக்க முயன்ற இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவ.27) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரணசிங்கவின் வெளியேற்றமானது ஐசிசியினால் இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதை எளிதாக்கலாம். முன்னதாக, நாட்டில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இனி அரசியல் தலையீடு இருக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்திடம் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை என்றாலும், கிரிக்கெட் வாரியம் மீதான நடவடிக்கையால் தன்னை கொல்ல சதி நடப்பதாக ரணசிங்க குற்றம் சாட்டிய சில மணி நேரங்களில் அவரை பதவி நீக்கம் செய்துள்ளார். விரிவாக படிக்க
விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணி அபார வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் தனது இரண்டாவது ஆட்டத்தில் தமிழகம் பெங்கால் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 23.4 ஓவர்களில் 84 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணியில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தாலும், 19.1 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழக அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதன்கிழமை பரோடாவுடன் மோத உள்ளது. விரிவாக படிக்க
குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, கடந்த இரண்டு சீசன்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக இருந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது ஷுப்மன் கில்லை புதிய கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அறிவித்துள்ளது. விரிவாக படிக்க
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஹரியானாவிடம் தோற்றது தமிழகம்
13வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையில் எந்த அணியும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் தமிழகம் 2-4 என்ற கோல் கணக்கில் ஹரியானாவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மூன்றாவது இடத்திற்கான போட்டியில் கர்நாடகாவுடன் தமிழகம் மோத உள்ளது. விரிவாக படிக்க
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தானிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற உள்ளதாக தகவல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றங்களை மேற்கொள்ள ஐசிசி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அனுமதி இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என பிசிசிஐ தெளிவுபடுத்தியதை அடுத்து, சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் முறையில் நடத்தலாமா என்ற ஆலோசனையில் ஐசிசி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு ஆட்செபம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், போட்டியை அங்கிருந்து மாற்றினால் உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, போட்டியை ஹைபிரிட் முறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.