விஜய் ஹசாரே கோப்பை 2023-24 : பெங்கால் அணியை எளிதாக வீழ்த்திய தமிழகம்
இந்தியாவின் உள்நாட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் தமிழ்நாடு பெங்கால் அணியை வீழ்த்தியது. மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பெங்கால் அணி தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் ஷாபாஸ் அகமது அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்த நிலையில், தமிழக அணியில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும், டி நடராஜன் மற்றும் பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
20 ஓவர்களுக்குள் இலக்கை எட்டிய தமிழகம்
85 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சாய் சுதர்சன் 8 ரன்களில் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நாராயண் ஜெகதீசன் 30 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் பாபா அபராஜித் 4 ரன்களிலும், விஜய் சங்கர் 2 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களிலும் அவுட்டாகினர். எனினும், பாபா இந்திரஜித் மற்றும் ஷாருக் கான் அவுட்டாகாமல் முறையே 17 ரன்களும் 9 ரன்களும் எடுத்த நிலையில் தமிழகம் 19.1 ஓவரில் இலக்கை எட்டி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தமிழக அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.