'2033-க்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ்': மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். காப்பீடுத் துறை இந்தியாவில் மிக வேகமாக விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் 58 கோடி பேர் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏழை எளிய மக்களும் காப்பீடு வசதி பெறுவதை உறுதி செய்ய ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அபராதம்
விதிமீறல்களுக்கு கடும் அபராதம்
காப்பீடு விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். கடந்த 3 ஆண்டுகளில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி (HDFC), எஸ்பிஐ (SBI) லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். CSR நிதி குறித்த விதிகளையும், மீறுபவர்களுக்கான தண்டனைகளையும் அமைச்சர் விளக்கினார். நிறுவனங்கள் தங்களின் கடந்த 3 ஆண்டுகால சராசரி லாபத்தில் 2% CSR பணிகளுக்கு செலவிட வேண்டும் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் CSR விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு மொத்தம் சுமார் ரூ. 20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.