பெட்ரோல் முதல் தங்கம் வரை: மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்படும் 4 முக்கிய துறைகள் எவை?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை தாண்டி, நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் எரிசக்தி அல்லாத இறக்குமதியில் 10% இந்த பிராந்தியத்தையே சார்ந்துள்ளது. TOI செய்தி குறிப்பின்படி, சில துறைகள் குறிப்பாக அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்தியாவின் வைர இறக்குமதியில் கிட்டத்தட்ட 47.5%, உரங்களில் 63%, பாலிமர்களில் 50% மற்றும் ஹைட்ரோகார்பன்களில் 48% ஆகியவை இப்பகுதியிலிருந்து வருகின்றன. இந்த மோதல் தொடர்ந்தால், இந்தச் சார்புநிலை விநியோகத் தடைகள் மற்றும் விலை அதிர்ச்சிகளுக்கான அபாயங்களை அதிகரிக்கிறது.
பாதிப்பு
பாதிக்கப்படும் முக்கியத் துறைகள்
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் சில முக்கியப் பொருட்களின் பங்கு: உரங்கள்(63%): விவசாயத்திற்குத் தேவையான நைட்ரஜன் சார்ந்த உரங்களுக்கு இந்தியா இப்பிரந்தியத்தையே பெரிதும் நம்பியுள்ளது. போர் நீடித்தால் உரங்களின் விலை உயர்ந்து, மத்திய அரசு விவசாயிகளுக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பாலிமர்கள்(50%): பிளாஸ்டிக் மற்றும் உற்பத்தித் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படலாம். வைரம் மற்றும் தங்கம்(47.5%):இந்தியா கச்சா வைரங்கள் மற்றும் தங்கத்தை இப்பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்து, இங்கு மெருகூட்டி மீண்டும் ஏற்றுமதி செய்கிறது. இறக்குமதி பாதிக்கப்பட்டால், இந்தியாவின் நகை ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் உள்ளது. ஹைட்ரோகார்பன்கள்(48%): எரிசக்தித் துறையின் முதுகெலும்பாக உள்ள இதன் விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால் அதிக ஆபத்து நிலவுகிறது.
மருந்து
மருந்து தட்டுப்பாடு அபாயம்
மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின்(API) விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளின் விநியோகம் பாதிக்கப்படலாம். உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறையால், பாராசிட்டமால், அமோக்சிசிலின், மெட்ஃபார்மின், அசித்ரோமைசின் உள்ளிட உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் சந்தையில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். மத்திய மருந்துத் துறைச் செயலாளர் மனோஜ் ஜோஷிக்கு, FOPE தேசியத் தலைவர் ஹரிஷ் கே. ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 10 நாட்களில் மருந்து மூலப்பொருட்களின் விலை 20% முதல் 60% வரை** உயர்ந்துள்ளது. PVC, அலுமினியம் ஃபாயில் மற்றும் பாட்டில்கள் போன்ற பேக்கேஜிங் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சில நிறுவனங்கள் நிலவும் சூழலைப் பயன்படுத்திச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் ஈட்ட முயல்வதாக" குற்றம் சாட்டியுள்ளார்.
தீர்வுகள்
மாற்று ஏற்பாடுகள் மற்றும் தீர்வுகள்
விமான உதிரிபாகங்கள் மற்றும் உரங்கள் போன்ற தேவைகளுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை இந்தியா நாட தொடங்கியுள்ளது. இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்பைக் குறைக்க முடியும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். தற்போதைய சூழலில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலை வலுவாக இருப்பதால், இத்தகைய வெளிநாட்டு அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் மாற்று நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆகியவை இந்தியாவிற்குப் பக்கபலமாக இருக்கும்.