கார் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! மார்ச் மாதத்தில் களமிறங்கும் டாப் 5 கார்கள்! முழு விவரங்கள் இதோ
செய்தி முன்னோட்டம்
2026 மார்ச் மாதம் இந்திய கார் சந்தை மிகவும் பரபரப்பாகக் காணப்பட உள்ளது. பட்ஜெட் விலையிலான எஸ்யூவி முதல் சொகுசு கார்கள் வரை பல புதிய மாடல்கள் இந்த மாதம் அறிமுகமாகின்றன. குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரெனால்ட் டஸ்டர் மீண்டும் இந்தியாவிற்கு வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் வெளியாகவுள்ள முக்கிய கார்களின் பட்டியல் மற்றும் சிறப்பம்சங்களை இங்கே காண்போம்.
ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் டஸ்டர் - மார்ச் 17
2022 இல் நிறுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர், புதிய பொலிவுடன் மார்ச் 17 அன்று மீண்டும் அறிமுகமாகிறது. இது 1.0 லிட்டர் (100 hp) மற்றும் 1.3 லிட்டர் (163 hp) என இரண்டு டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் வசதிகள் இதில் உள்ளன. மேலும், 2026 தீபாவளி வாக்கில் இதன் ஹைபிரிட் மாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ்
மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் - மார்ச் 2
சொகுசு எம்பிவி ரகத்தில் மெர்சிடிஸ் வி-கிளாஸ் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் களமிறங்குகிறது. இது 6 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என பல்வேறு இருக்கை வசதிகளுடன் வரவுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்கள் இருந்தாலும், இந்தியாவிற்கான என்ஜின் விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இது டொயோட்டா வெல்ஃபையர் காருக்குப் போட்டியாக அமையும்.
குஷாக் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா நிறுவனத்தின் பிரபலமான குஷாக் கார், புதிய மாற்றங்களுடன் இந்த மாதம் வெளியாகிறது. இதில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மசாஜ் வசதி கொண்ட பின் இருக்கைகள் போன்ற பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் 1.0 லிட்டர் மாடலில் இப்போது புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எபெல்லா
டொயோட்டா எபெல்லா
மாருதி இ-விட்டாரா காரின் டொயோட்டா வெர்ஷன் தான் இந்த அர்பன் குரூஸர் எபெல்லா. இது ஒரு முழுமையான எலக்ட்ரிக் கார் ஆகும். இதில் 49kWh மற்றும் 61kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 440 கிமீ முதல் 543 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதன் விலை விபரங்கள் இந்த மாதம் அறிவிக்கப்பட உள்ளன.
ஆடி SQ8
ஆடி SQ8 - மார்ச் 17
அதிவேக மற்றும் அதிக செயல்திறன் கொண்ட கார்களை விரும்புபவர்களுக்காக ஆடி SQ8 மார்ச் 17 இல் அறிமுகமாகிறது. இது 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜின் கொண்டது. வெறும் 4.1 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் படைத்தது. இதன் விலை மற்றும் சொகுசு அம்சங்கள் கார் ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.