Loading...
நான்கு ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை 18% குறைக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு ஐ.நா அவசர எச்சரிக்கை
பருவநிலை பேரழிவைத் தவிர்க்க கார்பன் உமிழ்வை தீவிரமாகக் குறைக்க ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்கு ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை 18% குறைக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு ஐ.நா அவசர எச்சரிக்கை

எழுதியவர் Vasuki
Oct 21, 2026
08:06 pm

செய்தி முன்னோட்டம்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான பேரழிவுகளைத் தவிர்க்கவும், சர்வதேச காலநிலை இலக்குகளை மீட்டெடுக்கவும் அடுத்த 4 ஆண்டுகளில் உலகளாவிய கார்பன் உமிழ்வை 18 சதவீதமும், அடுத்த 10 ஆண்டுகளில் (2035-க்குள்) 45 சதவீதமும் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது கைநழுவிவிட்ட போதிலும், அதிகப்படியான வெப்பநிலை உயர்வை மிகக் குறைந்த அளவுக்குக் கட்டுப்படுத்துவது இன்னும் சாத்தியமே என ஐ.நா தனது உமிழ்வு இடைவெளி குறித்த சமீபத்திய அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

இலக்குகளை எட்டத் தவறிய நாடுகள்

நாடுகள் அறிவிக்கும் நீண்டகாலப் பருவநிலை இலக்குகளுக்கும், களத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதாக UNEP-ன் உமிழ்வு இடைவெளி அறிக்கை 2026 சுட்டிக்காட்டியுள்ளது.

2025-ஆம் ஆண்டின் உலகளாவிய கார்பன் உமிழ்வு முந்தைய ஆண்டைப் போலவே நிலையாகக் காணப்பட்டாலும், புவிசார் அரசியல் குழப்பங்கள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் மீதான தொடர் சார்பு காரணமாக இது ஒரு சாதகமான உச்சம் எனக் கருத முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகள் தற்போது பின்பற்றும் கொள்கைகள் தொடர்ந்தால் புவி வெப்பம் 2.8 டிகிரி செல்சியஸ் வரை உயரும் ஆபத்து உள்ளது என்றும், புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் கூட வெப்பம் 2.6 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வல்லுநர்கள் கவலை

இன்ஜர் ஆண்டர்சன் அறிவுரை

UNEP-ன் நிர்வாக இயக்குநர் இன்ஜர் ஆண்டர்சன் இதுகுறித்துப் பேசுகையில், "தீவிரமான கூட்டு முயற்சிகள் மூலம் 1.5 டிகிரி இலக்கிற்குள் இருக்க வாய்ப்புள்ளது என பல ஆண்டுகளாக எச்சரித்தோம். ஆனால் நாடுகள் அதைத் தள்ளிப்போட்டதால் அந்த வாய்ப்புக் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது".

"எனினும், நம்பிக்கையை இழந்துவிடாமல் இந்த வரம்பு மீறலை எவ்வளவு குறுகிய காலத்திற்குள் சரிசெய்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியுமோ அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதற்கிடையே, கார்பன் டை ஆக்சைடை விட 80 மடங்கு அதிக வெப்பத்தை ஈர்க்கும் மீத்தேன் வாயு உமிழ்வைக் குறைப்பதே புவி வெப்பமடைதலை உடனடியாகக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழி என்றும், அரசியல் உறுதிப்பாட்டின் மூலமே இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT