Loading...
மெக்காவில் முத்தமிட்டதால் தூக்கு தண்டனையா? சவுதியின் ரகசிய நடவடிக்கைக்கு வங்கதேசம் எதிர்ப்பு
முன்னறிவிப்பின்றி இரு வங்கதேசத்தவரை சவுதி தூக்கிலிட்டதால் இருநாடுகளிடையே தூதரக விரிசல் ஏற்பட்டுள்ளது.

மெக்காவில் முத்தமிட்டதால் தூக்கு தண்டனையா? சவுதியின் ரகசிய நடவடிக்கைக்கு வங்கதேசம் எதிர்ப்பு

எழுதியவர் Vasuki
Oct 21, 2026
08:01 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகரின் மசூதி வளாகத்திற்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் என்ற இரு வங்கதேச நாட்டவர்கள் அந்நாட்டு அரசால் ரகசியமாகத் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தண்டனை குறித்து வங்கதேச அரசுக்கு அல்லது தூதரகத்திற்கு முன்கூட்டியே எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் ஆத்திரத்தை மூட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி சட்டம்

மெக்காவில் முத்தம் விவகாரம்

சவுதி அரேபிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நஸ்ருல் இஸ்லாம் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவரும் புனித நகரில் உள்ள மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் நீதிபதியின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்ட தஸீர் பிரிவின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அக்டோபர் 14 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

எனினும், அவர்கள் என்ன ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டார்கள் என்ற விரிவான விவரங்களை சவுதி உள்துறை அமைச்சகம் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனால், இருவரும் மெக்கா புனித மசூதிக்குள் முத்தமிட்டுக் கொண்டதாகவும், சிலர் நெற்றியில் மட்டுமே முத்தமிட்டதாகவும் கூறி புகார்கள் எழுந்த நிலையில், அதற்காகவே இந்த உச்சக்கட்ட மரண தண்டனை வழங்கப்பட்டதாக பல்வேறு சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம் விளக்கம் கேட்பு

பின்னணியில் சதியா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு 

மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மசூதியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த 25 வயதான நஸ்ருலின் குடும்பத்தினர், இச்சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு சதி எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

பணிபுரியும் இடத்தில் சக பாகிஸ்தானிய நாட்டவர் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே நஸ்ருல் மீது பொய் வழக்கு பதிய காரணமாக இருந்ததாகவும், சிட்டி அக்தரின் குடும்பத்தினரும் சக பெண் பணியாளர்களுடனான வாக்குவாதத்தால் அவர் சிக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வியன்னா தூதரக விதிகளின்படி மரண தண்டனை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே சவுதி அரசு தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ள வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம், நீதிமன்றத் தீர்ப்பு நகல்கள் மற்றும் மரண தண்டனைக்கான முழுமையான காரணங்களை விளக்குமாறு சவுதி அரேபிய அரசிடம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கோரியுள்ளது.

ADVERTISEMENT