கொலை செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிரிக்கெட் வாரியத்தில் ஊழலை அகற்றுவதற்கான தனது நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக ரொஷான் ரணசிங்க, தான் கொல்லப்பட்டால் விக்ரமசிங்க அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கிரிக்கெட் வாரியத்தை சுத்தப்படுத்தும் தனது பணிக்காக தான் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாக ரணசிங்க பாராளுமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் இடையே மோதல்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் இடையே மோதல் வெடித்தது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற படுதோல்விக்காக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்த ரணசிங்க, அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி இந்த மாத தொடக்கத்தில் அரசின் தலையீடுகளால் இலங்கை கிரிக்கெட்கை தற்காலிகமாக தடை செய்தது. இதையடுத்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யுமாறு விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ரணசிங்க நிராகரித்தார். அதன் பின்னர் ரணசிங்க தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக குற்றம் சாட்ட, அவர் அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.