தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழக அணி தோல்வி
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (நவம்பர் 27) நடைபெற்ற 13வது சீனியர் நேஷனல் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழ்நாடு ஹாக்கி அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் தமிழகம் மற்றும் ஹரியானா அணிகளும் கடுமையாக மோதின.
இதனால் முதல் பாதி முழுவதும் இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் 41வது நிமிடத்தில் அபிஷேக் ஹரியானா அணிக்காக கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார்.
தொடர்ந்து கடைசி நேரத்தில் 60வது நிமிடத்தில் தமிழகத்தின் பி எஸ் பிரகாஷ் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என சமனில் முடித்தன.
Tamilnadu lost to Haryana in National Hockey Championship
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் தமிழகம் தோல்வி
போட்டி சமனில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
ஷூட் அவுட்டில் ஹரியானா 4 கோல்கள் அடித்த நிலையில் தமிழக அணியால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் இறுதியில் 2-4 என்ற கோல் கணக்கில் ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தமிழகம் இழந்தது.
இதற்கிடையே மற்றொரு அரையிறுதி போட்டியில் மூன்று முறை சாம்பியனான கர்நாடகாவை வீழ்த்தி, 5-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா அணிகள் மோதுகின்றன.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை தீர்மானிப்பதற்கான போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதுகின்றன.