Loading...
யார் இந்த எஸ்.பி சிருஷ்டி சிங் மற்றும் ஐஜி காமினி? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கின் விசாரணை அதிகாரிகள் குறித்த சுவாரசிய தகவல்கள்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த எஸ்.பி சிருஷ்டி சிங் மற்றும் ஐஜி காமினி? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கின் விசாரணை அதிகாரிகள் குறித்த சுவாரசிய தகவல்கள்

எழுதியவர் Vasuki
Nov 25, 2026
02:44 pm

செய்தி முன்னோட்டம்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி MLA அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ். மேற்கொள்ள உள்ளார். மேலும், இந்த விசாரணையை சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜி என். காமினி நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் பெண் அதிகாரி என்பதால் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய தொடர்பு

யார் இந்த எஸ்.பி சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ்.?

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த 1993-ஆம் ஆண்டு பிறந்த சிருஷ்டி சிங், சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் என்பதால் தமிழ்நாட்டு சூழலும் மொழியும் இவருக்கு நன்கு பரிச்சயமானது.

2021-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 180-வது இடத்தைப் பிடித்து 2022 தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியானார்.

தற்போது திருப்பூர் மாவட்ட எஸ்.பியாகப் பணியாற்றி வரும் இவர், எவ்வித அரசியல் அழுத்தத்திற்கும் அஞ்சாமல் நேர்மையாகவும் வேகமாகவும் விசாரணை நடத்துவார் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

பின்னணி

29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஐஜி என்.காமினி ஐ.பி.எஸ்

வழக்கைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த என்.காமினி, 1997-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் டிஎஸ்பி-யாக பணியில் சேர்ந்து 2004-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர்.

ராமநாதபுரம், வேலூர், மதுரை சரக டிஐஜி-யாகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்.

2017-இல் முதலமைச்சர் பதக்கமும், 2019-இல் குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் பெற்ற இவர், தற்போது சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜி-யாக பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT