தமிழக அரசின் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.58,214 கோடி முதலீடுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசின் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழக வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) ஒருங்கிணைத்துள்ள இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்திற்குப் பெருமளவிலான தொழில் முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 78 முதல் 81 வரையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் வாயிலாக ரூ.58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகவும், சுமார் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாதனைகள்
முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டின் சாதனைகள்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தொழில் துறையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 97 நிறுவனங்களுடன் தமிழக வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முதல் மற்றும் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த முதலீடுகள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.