Loading...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரடி புகாரைத் தொடர்ந்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
TVK MLA அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரடி புகாரைத் தொடர்ந்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவிற்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் பேரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் MLA அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கட்கிழமை பிற்பகல் மாவட்ட ஆட்சியர் நேரடியாக அளித்த அதிகாரப்பூர்வ புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மது போதையில் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வாட்ஸ்அப் வழியாக ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்னிலையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ அல்லது தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாருக்கோ எந்தப் புகாரும் வரவில்லை என அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஆட்சியரைத் தொடர்பு கொண்டு அவர் புகார் அளித்துள்ளாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நாளே, ஆட்சியர் பத்மஜா காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னணி

சர்ச்சை வெடித்த பின்னணி

நடப்பு மாதத் தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியரிடம் தவறாக நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனிடையே, மதுரையில் நடைபெற்ற பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி காவல்துறையின் செயலற்ற தன்மையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், மக்கள் பிரதிநிதியின் இத்தகைய செயல் பணியிட துன்புறுத்தலாகக் கருதப்படாதா என்றும் வினவியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக காவல்துறை தலைவரிடம் நேர்மையான விசாரணை கோரியிருந்தது.

ADVERTISEMENT

அருள் விக்னேஷ்

குற்றச்சாட்டுகளை மறுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்

தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், தனக்கும் தனது கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பும் அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறு இது எனக் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு தகாத செய்திகளை அனுப்பியதாகவோ அல்லது மது போதையில் அவரது இல்லத்திற்கு சென்றதாகவோ கூறப்படும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்றும், ஆட்சியர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சரிபார்க்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT