Loading...
முதல்வர் விஜய் தலைமையில் இன்று கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்
முதல்வர் விஜய் தலைமையில் இன்று கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது

முதல்வர் விஜய் தலைமையில் இன்று கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 23, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2 மணியளவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்த அச்சமும், அடுத்தடுத்து வரவிருக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியூகங்களும் இந்த உயர்மட்டச் சந்திப்பின் முக்கிய விவாதப் பொருட்களாக அமைந்துள்ளன. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், VCK, MDMK, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் வியூகம்

கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியூகம்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூரையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.

இந்தத் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதா அல்லது தவெகவே நேரடியாக களம் இறங்குவதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி

கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தியும் நிர்வாகச் சிக்கல்களும்

மறுபுறம், தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள சூழலில், அரசுக்கு உள்ளேயும் கூட்டணிக்கு உள்ளேயும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் எழுந்துள்ளன.

தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதம், அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி கட்சித் தலைவர்களின் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண்பதன் மூலம் கூட்டணிக்குள் எழும் சலசலப்புகளைச் சரிசெய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

நம்பிக்கை இல்லா தீர்மான அச்சமும் ஆட்சியைக் காக்கும் முயற்சியும்

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்த அச்சமே இந்த அவசரச் சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாத கால இடைவெளி முடிந்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவர முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் பேசப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், கட்சி உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் விஜய் உறுதிமொழி பெற்றிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்துப் பேசுவதன் மூலம், எத்தகைய அரசியல் நெருக்கடி ஏற்பட்டாலும் கூட்டணி பலம் சிதறாமல் தவெக அரசுக்கு ஆதரவாக நிற்பதை உறுதி செய்கிறார்.

ADVERTISEMENT