கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாகிறாரா? விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் கள்ளக்குறிச்சியில் தீவிர விசாரணை
செய்தி முன்னோட்டம்
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச SMS அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங், புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
வழக்கின் பின்னணி
நீதிமன்ற நடவடிக்கை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர். திரிசூலி என்பவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஆட்சியர் முறைப்படி புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார்.
FIR
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு
மாவட்ட ஆட்சியரின் புகாரைத் தொடர்ந்து, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் மூன்று பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. இ. ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஜீவா, கோட்டாட்சியர் சி. முருகன் மற்றும் டிஎஸ்பி எம். கலையரசன் ஆகியோர் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
விசாரணை அதிகாரி
விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் வருகை
புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததுடன் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்வதற்கான பூர்வாங்க பணிகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதால், கள்ளக்குறிச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜினாமா
MLA பதவி ராஜினாமா மற்றும் கட்சி நடவடிக்கை
கைது நடவடிக்கை நெருங்கி வருவதால், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு மின்னஞ்சல் வாயிலாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அருள் விக்னேஷ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக வெற்றிக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விரைவில் நீக்கப்பட உள்ளதாகவும், கட்சி நடவடிக்கைக்கு பிறகு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.