மைக்ரோசாப்ட் 'Code Red' அவசர நடவடிக்கை: 24 மணி நேர சேவை தடையைத் தொடர்ந்து பொறியியல் கட்டமைப்பில் அதிரடி மாற்றம்
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களை பாதித்த 24 மணி நேரத் தொழில்நுட்ப சேவைத் தடையைத் தொடர்ந்து, தனது பொறியியல் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் Code Red என்ற உயர்மட்ட அவசர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை மிக விரைவாகக் கையாள்வதற்கான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய பாதிப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளக்கம்
கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட இந்த பெருமளவிலான சேவைத் தடையால் அவுட்லுக், டீம்ஸ், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மற்றும் கோபைலட் செயற்கை நுண்ணறிவு சேவைகள் முடங்கின.
இதனால் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசுப் பணிகள், பங்குச் சந்தை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தகவல்தொடர்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் விண்டோஸ் அமைப்பில் கண்டறியப்படாமல் விடப்பட்ட அளவிடுதல் குறைபாடே இதற்குக் காரணம் என்றும், இதற்கு சைபர் தாக்குதலோ அல்லது செயற்கை நுண்ணறிவு முகவர்களோ காரணமல்ல என்றும் மைக்ரோசாப்ட் விளக்கமளித்ததுடன், தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவும் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியிருந்தார்.
கோட் ரெட்
பொறியியல் குறைபாடுகளைச் சரிசெய்ய 'கோட் ரெட்' நடவடிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் மின்னஞ்சல் சேவையான எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் வரலாற்றிலேயே மிக மோசமான தடையாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.
இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் மின்னஞ்சல் சேவையின்றித் தவித்ததாகவும், எனவே 'கோட் ரெட்' நடவடிக்கை தங்களது குழுவின் முதன்மைப் பணியாக இருக்கும் என்றும் எம்365 கோர் தலைவர் ஜேசன் ஹென்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெருக்கடியான நேரத்தில் மூத்த பொறியாளர்கள் களமிறக்கப்பட்ட போதிலும், சிதறடிக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளால் ஒருங்கிணைப்பில் சிக்கல் ஏற்பட்டதாகவும், 11 டீம்ஸ் உரையாடல்களில் 11,000-க்கும் மேற்பட்ட செய்திகள் பரிமாறப்பட்டதாகவும் நிறுவனத்தின் துணைத் தலைவர் அமண்டா சில்வர் தெரிவித்துள்ளார்.
புதிய இலக்கு
ஒரு மணி நேரத்தில் சேவையை மீட்டெடுக்கும் புதிய இலக்கு
'கோட் ரெட்' திட்டத்தின் கீழ், அதிகப்படியான இணையப் போக்குவரத்தைச் சிறப்பாக கையாளுதல், புவியியல் ரீதியாக சேவைகளைப் பரவலாக்குதல் மற்றும் விரைவான மீட்பு அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து முக்கியப் பிரிவுகளில் மைக்ரோசாப்ட் கவனம் செலுத்துகிறது.
இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படும் உலகளாவிய சேவைத் தடைகளை ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாகச் சரிசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணினித் தரவுகளை விரைவாக பகுப்பாய்வு செய்து சிக்கல்களைக் கண்டறியச் செயற்கை நுண்ணறிவு முகவர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அவசர மென்பொருள் திருத்தங்கள் உலகெங்கிலும் உள்ள பயனர்களை சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தையும் மைக்ரோசாப்ட் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.
சமீபத்திய சம்பவத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தை உலகளவில் நடைமுறைப்படுத்த ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை ஆனதை ஹென்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.