நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மற்றும் வயநாடுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், பாலக்காடு மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஜூலை 27ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் வடக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குஜராத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்
அதிகமாக பெய்த கனமழையால் குஜராத்தின் சின்ஹான் மற்றும் நெய் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளத்தால் தவித்து வந்த ஜுனாகத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் குஜராத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று குஜராத்தில் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் துவாரகா, ராஜ்கோட், பாவ்நகர் மற்றும் வல்சாத் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குஜராத்தில் சனிக்கிழமையன்று இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள், 10 மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 300 கிராமப்புற சாலைகள் வெள்ளத்தால் முடக்கப்பட்டன. கனமழை காரணமாக அகமதாபாத் விமான நிலையம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை
குஜராத் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் பூபேந்திர படேலிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார். மகாராஷ்டிராவில், இடைவிடாத மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் குறைந்தது 19 பேர் உயிரிழநதுள்ளனர். எனினும், மும்பைக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கையாக குறைத்துள்ளது. தானே, பால்கர், சிந்துதுர்க், ரத்னகிரி மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மும்பை-புனே விரைவுச் சாலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள அடோஷி கிராமத்திற்கு அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மும்பைக்கான போக்குவரத்து தடைப்பட்டது. நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டெல்லியில் அபாய அளவை விட்டு குறையாத யமுனை நதியின் நீர்மட்டம்
டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம், அபாய குறியான 205.33 மீட்டரை மீண்டும் தாண்டியுள்ளது. இன்று காலை 7 மணிக்கு 206.56 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம், காலை 8 மணி நிலவரப்படி, 206.54 மீட்டராக குறைந்தது. இன்று மதியம் 2 மணிக்கு மேல் இந்த நீர்மட்டம் 206.42 மீட்டராக குறையும் என்று மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது. அப்படி குறைந்தாலும் யமுனையின் நீர்மட்டம் அபாய குறிக்கு மேல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. யமுனை ஆற்றின் கிளை நதியான ஹிண்டன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காசியாபாத்தின் கர்ஹேரா குக்கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர். ஹிண்டன் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் அந்த கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஒடிசா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கனமழை
உத்தரகாண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை உத்தரகாண்டில் கனமழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இதுவரை கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர், 300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவில் இன்று புயல் உருவாகியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அப்பகுதியின் காய்கறி வயல்களும், பழத்தோட்டங்களும், சாலைகளும் சேதமடைந்தன.