Page Loader
TRF மீதான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது

TRF மீதான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையை "இந்தியா-அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் வலுவான உறுதிப்படுத்தல்" என்று விவரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்? பாகிஸ்தானை தலமாக கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களை அடக்க இது உதவுமா?

ராஜதந்திர வெற்றி

அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவிற்கான ராஜதந்திர வெற்றி 

அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக(FTO) மற்றும் நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதியாக(SDGT) TRF அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை இந்தியா தனது முக்கியமான ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடுகிறது. மே மாதம் UNSCயில் வெளியிடப்பட்ட குறிப்பு, TRF பெயரைத் தவிர்த்தது. இது பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் சீனாவின் அழுத்தத்தின் விளைவாக தவிர்க்கப்பட்டது என்று இந்தியா கருதுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் அதிகாரபூர்வ அறிவிப்பு, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு வலுவாக அமையும். இந்தியா TRF மீது தடைகளை விதிக்க UNSCயை வலியுறுத்தும் புதிய வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. மேலும் இது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள பன்னாட்டு நிதி நடவடிக்கை அமைப்பின் (FATF) கூட்டத்தில் பாகிஸ்தானை மீண்டும் 'சாம்பல் பட்டியலில்' சேர்க்க இந்தியாவுக்கு ஆதாரங்களை வழங்கும்.

நன்றி 

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு நன்றி கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது நன்றியை தெரிவித்தார். "TRF மீது நடவடிக்கை எடுப்பது, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்பது நமது உறுதியை உறுதிப்படுத்துகிறது. இது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் பலத்தை காட்டும்," என அவர் கூறினார். முடிவாக, TRF-ஐ உலக அளவில் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்திய அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இந்திய அரசியல்துறையின் நீடித்த முயற்சிகளுக்குப் பெரும் வெற்றியாகவும், பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் சவாலுக்குள்ளாக்கும் முக்கியத்துவமுடைய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.